ராஜபக்சர்களை பாதுகாக்கும் எதிர்க்கட்சிகளும், போராடாத தமிழ், முஸ்லிம் தலைமைகளும்
கடந்த 30 ஆண்டுகால இனப்படுகொலை யுத்தம் இலங்கையை பாரதூரமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்க வைத்துள்ளது. இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து சிங்கள பௌத்த அரசென இலங்கை அரசை கட்டமைப்பு செய்யப்பட்டது, அதன் விளைவால் சுமாராககடந்த 75 ஆண்டுகால இலங்கையின் உள்நாட்டு அரசியலில் இனப்பகை என்பது வைரம் பாய்ந்து முற்றிய நிலையில் உள்ளது.
இந்தப் பலமான பகைமைக்கு பிரதானமாக மூன்று குடும்பங்கள் ஆட்சி அதிகாரத்தை தங்கள் கையில் வைத்திருப்பதற்காக மேற்கொண்ட இன அழிப்பு நடவடிக்கைகள் அடிப்படைகளாக அமைந்தன. அதில் ராஜபக்சக்கள் இறுதியாக கடந்த இரண்டு தசாப்தங்களாக இலங்கை இனவழிப்பு அரசியலில் சக்தி மிக்கவர்களாக உருத்திரண்டு இருக்கிறார்கள்.
எனவே ராஜபக்சர்களுக்கு உள்நாட்டில் காணப்படும் தமிழ் மற்றும் முஸ்லிம் இனப்பகை என்பன மிகப்பலமான அம்சமாக உள்ளன. அதேநேரத்தில் பன்னாட்டு அரசியலில் அவர்கள் கையாண்ட வெளியுறவுக் கொள்கையின் விளைவாக மேற்குலகத்தையும், மேற்குலக நிறுவனங்களையும் வேண்டத் தகாதவர்களாக புறந்தள்ளி ஒதுக்கியதனால் மேற்குலகின் பகையையும் சம்பாதித்திருக்கின்றனர்.
கூடவே அண்டை நாட்டுடன் அவ்வப்போது முரண்பட்டு பகைமையை சம்பாதித்தாலும் தற்போது சில விட்டுக்கொடுப்புக்களையும் செய்து அவர்களை அணைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அண்டை நாடு இவர்களை நம்பத் தயாரில்லை. எனினும் அயல் நாடு என்ற அடிப்படையில் இவர்களைப் பாதுகாக்க உதவுகின்றது என்பது உண்மையானாலும் இவர்களை நம்பியிருக்க அவர்கள் தயாரில்லை.
இந்த வகையில் ராஜபக்சர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் காணப்படும் பகைமை அவர்களது அதிகார நிலையை பலவீனமான நிலையில் வைத்திருக்க வழிவகுக்கின்றது . அத்தோடு ராஜபக்சக்கள் மிகத் தெளிவான இறுக்கமான குடும்ப ஆதிக்கத்தை இலங்கையில் நிலைநாட்ட மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் இவர்களுடைய கட்சியின் உள்ளேயும் உட்கட்சி முரண்கள் உண்டு.
சிங்கள பௌத்த நாடு
அத்தோடு இவர்கள் மேற்கொண்ட ஊழல்கள், நிர்வாகத் திறமையின்மை, நிர்வாகச் சீர்கேடுகள் போன்றவற்றால் ஏற்பட்ட பெரும் பொருளாதார நெருக்கடியும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பும் சிங்கள மக்களை இவர்களுக்கு எதிராக கிளர்ந்தெழச் செய்துள்ளது. நீண்ட காலமாக ‘சிங்கள பௌத்த நாடு‘என இனவாத அரசியலை மக்கள் மத்தியில் திணித்து அந்த மாயைக்குள் சிங்கள மக்களை அடைத்து வைத்திருந்தார்கள்.
தற்போது அந்த மாயையை உடைத்துக்கொண்டு பொருளாதார சுமையை தாங்க முடியாமல் அடித்தள மக்கள் வீதிக்கு வந்து "கோட்டா கோ கோம்" என இவர்களுக்கு எதிராக போராடத் தலைப்பட்டு இருக்கிறார்கள். இதுவும் இவர்களுக்கான தன்னினப் பகைதான். அந்த வகையில் இவர்களுக்கு பலமான உள்ளக, வெளியக பகைமைகள் பல நிலவுகின்றன.
பலமான ஒரு எதிர்க்கட்சி இல்லை
ஆனால் இத்தகைய பகைமைகள் எல்லா புறமும் சூழ்ந்து இருந்தாலும் இவர்களுக்கு எதிரான பலமான ஒரு எதிர்க்கட்சி இன்மை என்பது இவர்களைத் பாதுகாக்கின்றது. இவர்களுக்குரிய பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கடந்த தேர்தலில் எந்த ஒரு ஆசனத்தையும் பெறவில்லை.
அனைத்து முன்னணித் தலைவர்களும் தோல்வி அடைந்திருக்கிறார்கள். தேசியப்பட்டியல் மூலமே ஒரு ஆசனத்தை ரணில் விக்ரமசிங்க பெற்று நாடாளுமன்றத்தில் பிரவேசித்து இருக்கிறார். எனவே அவர் மிகப் பலவீனமான ஒரு தலைவராகவே இருக்கிறார்.
அதே நேரத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து சஜித் பிரேமதாச தலைமையில் "தேசிய மக்கள் சக்தி" என பிரிந்து சென்ற அணியினர் குறிப்பிடக்கூடிய ஆசனங்களை பெற்று எதிர்க்கட்சி ஆசனத்தில் இருந்தாலும் சாதியம் என்ற அடிப்படையில் சமூக அந்தஸ்து அற்ற தலைவராகவே சஜித் பிரேமதாசவும் அவர் தலைமையிலான கட்சியும் காட்சியளிக்கிறது.
இந்த இரண்டு கட்சிகளினுடைய பலவீனமே ராஜபக்சர்களுக்கான கொடையாக, பலமாக, அதிர்ஷ்டமாக அவர்களை பதவியில் நீடித்து நிற்க வைத்திருக்கிறது. இந்தப் பின்னணியில் பொதுஜன பெரமுனவுக்குள் ராஜபக்ச குடும்பத்தினரை தவிர்த்து உட்கட்சிக்குள் தலைமை தாங்கக்கூடிய பலமான தலைவர்கள் இல்லை. விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள் கம்யூனிஸ அடிப்படையில் இனங்காணபட்டவர்கள்.
அத்தோடு தனித்து நின்று தேர்தலில் வெற்றி பெற முடியாதவர்கள். கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டுதான் தேர்தலில் வெல்லக்கூடியவர்கள். எனவே தனித்து வெல்லக்கூடிய பலமான தலைவர்களை ராஜபக்சர்கள் தங்களுடைய கட்சிக்குள் வைத்திருக்கவில்லை. இவர்களுடைய கட்சிக்குள் உள்ள தலைவர்களைக் கொண்டு மாற்று அரசாங்கத்தை அமைக்கவோ, அல்லது ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தவோ முடியாத பலவீனமானவர்களையே ராஜபக்சர்கள் கொண்டிருப்பது அவர்களுக்கு உட்கட்சிக்குள் பாதுகாப்பையும், பலத்தையும் அளிக்கிறது.
அதேநேரம் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுடன் முஸ்லிம் சமூகத்தின் மீது பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு தொடர்ச்சியாக பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் முஸ்லிம் தரப்பினரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி போராட்டத்தில் நேரடியாக பங்குபற்றாமல் அமைதியாக இருக்கிறார்கள்.
எனினும் போராட்டத்துக்கு பின்னால் இருந்து ஆதரவு அளிக்கிறார்களாயினும் பலமான பாத்திரத்திலும் வைக்கவில்லை. இதுவும் ராஜபக்சர்களுக்கு பலத்தை சேர்க்கிறது. அதேநேரத்தில் ராஜபக்சர்களினால் இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் அழிவிலிருந்தும், அதனால் ஏற்பட்ட அச்சத்தில் இருந்தும் தற்போது மீண்டுள்ளனர்.
இவ்வளவு காலமும் 71% பெரும்பான்மை இனப்பலம் கொண்ட எதிரியோடு தமிழர்கள் மோதினார்கள். ஆனால் இப்போது எதிரி பல துண்டங்களாக சிதைவடைந்து பலவீனமடைந்து இருக்கிறான். எதிரி பலவீனமடைந்து இருக்கின்றபோது அவனை வீழ்த்துவதுதான் இலகுவானது.
போராடாத தமிழ் தலைமைகள்
அந்த வகையில் முன் எப்பொழுதும் இல்லாத அளவு போராடுவதற்கும், எதிரியை வீழ்த்துவதற்குமான வாய்ப்புகள் தற்போது மிக பலமாக தமிழர் பக்கம் உள்ளது. எனவே தமிழ் தலைமைகள் போராட வேண்டிய தருணத்தில் போராடாமல் இருப்பதுவும் பெரும் சமூக விரோதக் குற்றம் ஆகும். ஏனைய தரப்பினரைவிட உண்மையில் ராஜபக்சர்களுக்கு எதிராக இப்போது போராடக்கூடிய சக்தி மிக்கவர்களாக தமிழ் தரப்பினர்தான் உள்ளனர்.
சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு 13 நாடாளுமன்ற ஆசனங்களையும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ் இரண்டு நாடாளுமன்ற ஆசனங்களையும், விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் தேசிய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஒரு ஆசனத்தையும் பெற்று மொத்தம் 16 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்றைய நிலையில் தமிழர்களுக்கான பெரும் பலம்தான். இவர்கள் ராஜபக்சர்களை ஆட்டங்காணச் செய்யக் கூடிய சக்திதான்.
ஆனால் இங்கே வேதனையான விடயம் என்னவெனில் போராட வேண்டிய தமிழ் தலைவர்களோ "ராஜபக்சர்கள் சிங்கள தேசத்தின் வெற்றி வீரர்கள்" என்ற மாயக்கோட்டையில் வெடிப்பு ஏற்பட்டு உடைந்து தகரும் நிலையில் உள்ள போது தாமும் சேர்ந்து உந்தித் தள்ளி தகர்ந்து விழுத்துவதற்கு ஒத்துழைக்காமல், ராஜபக்சர்களுக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு துரும்பைத்தானும் தூக்கிப் போடாமல் பாசாங்கு அரசியல் செய்கிறார்கள்.
இத்தகைய தமிழ் தரப்பினரின் போக்கும் ராஜபக்சர்களுக்கு அரணாக அமைகிறது. எனவே ராஜபக்சர்களுக்கு எதிராக போராடக்கூடிய சக்தி வாய்ந்த தமிழ்த் தரப்பு போராடவில்லை. அதற்கு அடுத்த நிலையில் உள்ள முஸ்லிம் தரப்பும் போராடவில்லை. ராஜபக்சர்களின் எதிர்கட்சியாக இருந்த ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் பலவீனமான தோல்வியடைந்த தலைவர்களை கொண்டதனால் அவர்களும் ராஜபக்சர்களுக்கு எதிராகப் போராடவில்லை. தொழிற்சங்கங்கள் இடதுசாரிகளின் கைகளில் உள்ளன. இடதுசாரிகள் ராஜபக்ச கட்சியில் உள்ளனர்.
எனவே தென்னிலங்கை தொழிற்சங்கங்களும் ராஜபக்சவின் கட்சியின் செல்வாக்குக்கு உட்பட்டு இருப்பதனால் அவர்களும் களத்தில் இறங்கித் தீவிரமாக போராடவில்லை. இப்போது ராஜபக்சர்களுக்கு எதிராக போராடுபவர்கள் உதிரிகளாகவும், சமூக அந்தஸ்து அற்றவர்களாகவும், அரசியல் பலவீனம் உள்ளவர்களாகவும் உள்ள நகர புறம் சார்ந்த ஒரு சிறு தொகுதியினரே ராஜபக்சர்களுக்கு எதிராகப் போராடுகிறார்கள். இதுவும் ராஜபக்சர்களுக்கு பலத்தை அளிக்கிறது.
இலங்கை இராணுவக் கட்டமைப்பு
அதற்கு அடுத்தபடியாக இலங்கை இராணுவக் கட்டமைப்பு என்பது சர்வதேச ரீதியில் போர்க்குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றம், என இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு உட்பட்டிருக்கிறது. அவர்களை பாதுகாக்க கூடியவர்கள் ஏற்கெனவே போர்க்குற்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் ராஜபக்சர்கள்தான் என்ற நம்பிக்கை இராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் மிகவலுவாகவே உள்ளது. ஏனெனில் இனப்படுகொலையை ராஜபக்சவின் பெயரினால் நடத்தியவர்கள் இராணுவ அதிகாரிகள்.
எனவே அவர்கள் ராஜபக்சர்களிடமிருந்து வெளியே செல்வதானால் அவர்கள் கழுத்தை நோக்கி கயிறு நீளும். எனவே அவர்கள் ராஜபக்சர்களுடன் கூட்டு சேர்ந்து இருப்பது அவர்களுக்கு பாதுகாப்பளிக்கும் என்ற அடிப்படையில் படைத்தரப்பு ராஜபக்சர்களுக்கு ஆதரவாக எப்போதும் இருக்கும். இதுவும் ராஜபக்சர்களுடைய பிரமாண்டமான பலம்தான்.
பௌத்த மஹா சங்கத்தைப் பொறுத்தவரையில் இன்றைய காலத்தில் சிங்கள தேசத்தில் ராஜபக்சர்களுக்கு வெளியே சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலைநாட்டி தலைமை தாங்கக்கூடிய மூர்க்கமான வலுவான தலைவர்கள் வேறு யாரும் இல்லை என்பது அவர்களுடைய வலுவான நம்பிக்கை. எனவே பௌத்த மகா சங்கத்தின் அந்த நம்பிக்கையையும் படைத்தரப்பினரின் நம்பிக்கையும் ராஜபக்சர்கள் பெற்றிருக்கிறார்கள். இதுதான் அவர்களுடைய ஆத்ம பலம். எனவேதான் படைத் தரப்பில் இருந்து ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான ஒரு சிறிய சலசலப்பும் ஏற்படவில்லை.
அவர்கள் அரசாங்கத்தை பாதுகாப்பதற்கே திடசங்கற்பம் பூண்டு இருக்கிறார்கள். ஆனால் மகாசங்கத்தினர் சிங்கள பௌத்த பொது மக்களில் தங்கியிருக்கும் நிறுவனம் என்ற வகையில் மக்களின் அபிப்பிராயங்களுடன் தம்மையும் அடையாளம் காட்டுவதற்காக சில சலசலப்புகள் செய்தாலும் அவர்களை கைவிட்டால் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்திற்கு தலைமை தாங்கவல்ல வேறு ஒரு சிங்களத் தலைவர்கள் கிடையாது என்பது அவர்களுடைய தெளிவான முடிவு. எனவே இன்று ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடிக்கு தீர்வு காணும் முகமாக பொய்யான, ஏமாற்றுகரமான ஒரு புதிய அரசாங்கத்தை ராஜபக்சக்கள் அமைத்திருக்கிறார்கள்.
தேர்தலில் ஒரு ஆசனத்தைக்கூட வெற்றி பெறாத ஐக்கிய தேசியக் கட்சின் தலைவரும் வெறும் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் நாற்காலியில் அமர்த்தியுள்ளார்கள். உண்மையில் பிரதமர் நாற்காலியில் அமர்ந்து இருப்பது ராஜபக்சக்களின் உயிரும் ரணில் விக்ரமசிங்கவின் உடலும்தான். இந்த புதிய அரசாங்கம் ராஜபக்சர்களை தொடர்ந்து பாதுகாக்கும். அவ்வாறு பாதுகாப்பதற்கு ஏற்ற வகையில்த்தான் மகா சங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய மகிந்த ராஜபக்ச பதவி துறப்பு, ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு நாடகமும் நடந்தேறியிருக்கிறது.
மக்களையும் உலகையும் ஏமாற்றுவதில் சிங்கள ராஜதந்திரம் கைதேர்ந்தது என்பதை அவர்கள் மீண்டும் நிரூபித்து இருக்கிறார்கள். சிங்கள ஆளும் உயர்குழாம் குடும்ப அரசியலை தொடர்ந்து தக்க வைக்கவும், ஒரு குடும்ப அரசியலுக்கு ஆபத்து ஏற்படுகின்ற போது அடுத்த குடும்ப அரசியல் உள்நுழைந்து தமக்கிடையே போராடாமல் பதவிகளை பரஸ்பர நலன்களுடன் பங்கு போட்டுக் கொள்ளவும் பரஸ்பரம் குடும்ப ஆதிக்கத்தை தாங்கிப் பிடிக்கவும் அவை தயாராக உள்ளன. இங்கே ஜனநாயகத்தின் பெயரால் ரணில் விக்ரமசிங்க பிரதமராக்கப்பட்டு ராஜபக்சக்களை பாதுகாக்கின்ற ஊன்று கோலான பாத்திரத்தை ரணில் வகிக்கின்றார்.
அதேநேரத்தில் படுதோல்வி அடைந்த தனது கட்சியையும், கட்சியிலிருந்து பிரிந்து தேசிய மக்கள் சக்தி கட்சி பக்கம் சென்ற தனது தலைவர்களையும் மீண்டும் இணைத்து தனது கட்சியை பலப்படுத்த இந்தப் பதவி நாற்காலியை ரணில் பயன்படுத்துகிறார். கூடவே தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் வெறும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு பிரதமராகவரக் கனவுகாண முடியாத சூழலில் இப்படி ஒரு பிரதமர் பதவி கிடைத்திருப்பதை அவர் ஒரு வரப்பிரசாதமாக கையிலெடுத்துள்ளார்.
எனவே பரஸ்பர நலன்கள் சந்தித்த சந்திப் புள்ளியில் உறவு மலர்ந்து புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆட்சி மாற்றத்தின் ஊடாக இலங்கை அரசியலில் உள்ள சூக்குமங்களையும், குடும்ப ஆதிக்க அரசியல் வலு நிலையை புரிந்து கொள்ளவேண்டும். எனவே இன்றைய பொருளாதார நெருக்கடியையும், ராஜபக்சர்களுக்கு எதிரான போராட்டத்தையும் பெரும் பொருளாதார பிரச்சினையாகப் பார்க்காமல் இலங்கையின் இனப்பிரச்சினை, உள்ளக அரசியல் பிரச்சினை, அண்டை நாட்டுப் பிரச்சினை, பிராந்தியம் சார் பிரச்சினை, சர்வதேசம் சார்ந்த பிரச்சினை என்பவற்றுக்குள்ளால் இணைத்துப் பார்க்க வேண்டும்.
இந்தியாவைப் பொறுத்த அளவில் இலங்கையில் மாற்று அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான சரியான, தமக்குச் சாதகமான தலைமைகள் இல்லை. எனவே வேறு வழியின்றி அவ்வப்போது தமது தேவைக்கு ஏற்ற மாதிரி வளையக்கூடிய இந்த அரசாங்கத்தை பாதுகாக்க முனைகிறது. அதே நேரத்தில் சீனாவும் இந்த அரசாங்கத்தை பாதுகாக்க முனைகிறது. ஏனெனில் ராஜபக்சக்கள் சீனாவின் நிலையான நண்பர்கள் என்பதை அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் மேற்கு உலகத்தை பொறுத்தளவில் இந்த அரசாங்கம் வீழ்த்தப்பட வேண்டும் என விரும்புகிறார்கள்.
ஆனால் இந்தோபசுபிக் பிராந்தியத்தில் உள்ள சீனாவும், இந்தியாவும் இந்த அரசாங்கத்தை விடுத்து மாற்று அரசாங்கமொன்றை அமைக்க முடியாமையினால் ராஜபக்சவின் அரசாங்கம் விழாமல் தக்கவைக்கப்படவே விரும்புகிறார்கள். எனவே போராட வேண்டிய தமிழ் தரப்பு போராடவில்லை. அதேபோல முஸ்லிம் தரப்பும் போராடவில்லை.
பலமான தொழிற்சங்கங்களை கொண்ட இடதுசாரிகளும் போராடவில்லை. ராஜபக்சக்களின் பிரதான குடும்ப எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் போராடவில்லை. ராஜபக்ச கட்சிக்குள் தலைமை தாங்கக்கூடிய மாற்று தலைவர்களின்மை, சிங்கள மக்களிடையே பல மிக்கதாக காணப்படும் மகா சங்கம், படைத்தரப்பு போராடவில்லை. பௌத்த மகா சங்கங்கள் படைத்தரப்பு ராஜபக்சர்களின் தலைமையை தொடர்ந்து தக்கவைக்க விரும்புகின்றன.
இந்நிலையில் வெறும் உதிரிகளாகவும் பலவீனமானவர்களும் போராடும் சக்திகளால் ராஜபக்சர்களின் ஆட்சியை விழ்த்த முடியாத இலையே பெரிதும் காணப்படுகின்றது. இங்கு நகர்புற உதிரிப் பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளினாலும் மற்றும் பலம்வாய்ந்த உள்நாட்டு அரசியல் சக்திகளினாலும் கைவிடப்பட்டு அவர்களின் சரியான, நீதியான போராட்டத்திற்கு பெரும் துரோகம் இழைக்கப்படுகிறது என்பதே உண்மை.