சனத் நிஷாந்தவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்ய சட்ட மா அதிபருக்கு காலக்கெடு
ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்ய சட்ட மா அதிபருக்கு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டவுடன் நீதிமன்றங்களில் பிணை வழங்கப்படுவது குறித்து விமர்சிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
அதனையடுத்து அவர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளதாக தெரிவித்து, சனத் நிஷாந்தவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது நீதிமன்ற சங்கத்தின் பணியாளர்கள் சங்கம் மற்றும் இரண்டு சட்டத்தரணிகள் ஆகியோர் இணைந்து அதற்கான முறைப்பாட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர்.
விசாரணைகள்
இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலையான ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு ஏற்கெனவே பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வழக்கின் விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் பந்துல கருணாரத்தின மற்றும் ஆர்.குருசிங்க ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது எனினும் சனத் நிஷாந்தவுக்கு எதிரான குற்றப் பத்திரிகை சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் இதுவரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.
அதனையடுத்து எதிர்வரும் ஜனவரி 13ஆம் திகதிக்கு முன்னதாக ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.