கொழும்பில் பாடசாலையில் உயிரிழந்த மாணவி - வெளிநாட்டிலிருந்த வந்த தாயின் கதறல்
கிராண்ட்பாஸ் வேரகொட பாடசாலையில் கொங்கிறீட் சுவர் இடிந்து விழுந்து ஆறு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிரேத பரிசோதனை செய்து மரணத்திற்கான காரணத்தை நீதிமன்றில் அறிவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் சாந்த ஹேரத் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரிக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேலும், கான்கிரீட் சுவர் இடிந்து விழுந்தது குறித்த நிலை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தேவையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது.
சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்டே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர் உட்பட பல ஆசிரியர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபருடன் கலந்தாலோசித்து உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவிக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை சம்பவத்தில் உயிரிழந்த மாணவியின் தாயார் சவதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியுள்ளார். இன்று மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.
சுமார் 01 வருடங்கள் 02 மாதங்களுக்கு முன்னர் வீட்டு வேலை செய்வதற்காக சவுதி சென்றிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விமான நிலையத்தில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கருத்தை வெளியிட்ட தாயார் “எனது மூன்று பிள்ளைகளின் எதிர்காலத்தை உருவாக்க நான் வெளிநாடு சென்றேன். வீடு கட்ட தேவை இருந்தது. நேற்று என் மகளின் பிறந்தநாள். நான் தொலைபேசியில் அழைதது மகளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டேன். கேக் வேண்டும் என்றார்.
நான் வர இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது என்றேன். வரும்போது கேக் கொண்டு வருமாறு கூறினார். ஆனால் என்னால் கேக் கொண்டு வர முடியவில்லை. பாடசாலையில் சுவர் இடிந்து இறுதியில் என் மகள் உயிரிழந்து விட்டார்.
இப்போது என் இரண்டு மகன்கள் மட்டுமே உள்ளனர். எங்களுக்கு வீடு கட்ட உதவுங்கள்” என கதறி அழுதார்.
உயிரிழந்த சிறுமியின் தாயார் மஸ்கட்டில் இருந்து பிற்பகல் 02.25 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-2273 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், அவரை அழைத்துச் செல்வதற்காக அவரது நெருங்கிய உறவினர்கள் குழுவொன்று விமான நிலையத்திற்கு வந்துள்ளது.



