இணையவழி பாதுகாப்பு சட்டமூல விவாதத்தை ஒத்திவைக்குமாறு சஜித் கோரிக்கை
எதிர்வரும் வாரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் மீதான விவாதத்தை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான கோரிக்கை அடங்கிய கடிதம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பங்குதாரர்களது யோசனை
கோரிக்கை கடிதத்தில், ‘தற்போது முன்மொழியப்பட்ட யோசனை அதன் வடிவத்தில் சட்டமாக்கப்பட்டால், இணையவழி பாதுகாப்பு ஆணையம் மற்றும் அமைச்சரின் சர்வதிகார அதிகாரங்களுக்கு இடமளித்து விடும்.
மேலும், மக்களின் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை மீறும் செயலாக அமைந்து விடும். அத்துடன் அது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கும் உதவும்.
இந்தச் சட்டத்தின் விளைவாக சர்வதேச அளவில் புகழ்பெற்ற இணையவழிச் சேவை வழங்குநர்கள் பாதிக்கப்படும் போது குறித்த யோசனையை ஆதரிக்கும் அனைத்துக் கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும்.
எனவே, விவாதத்தை ஒத்திவைத்து அனைத்து பங்குதாரர்களது யோசனை மீது விவாதம் நடத்த போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும்.
மேலும், இதே போன்ற சட்டத்தை அறிமுகப்படுத்தும் போது பல நாடுகள் பின்பற்றும் நடைமுறையும் இதுவேயாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |