இலங்கையின் நெருக்கடி குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் வெளியிட்ட தகவல்
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சியில் இலங்கையின் மூன்று முக்கிய கடன் வழங்கும் நாடுகளான ஜப்பான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.
கடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாடாக இலங்கை இன்று எதிர்நோக்கி வரும் நிலைமை குறித்து பூகோள அபிவிருத்தி நிலையத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்த அவர், நான்கு முன்மொழிவுகளையும் முன்வைத்துள்ளார்.
பரிகாரம் என்னவென்று நமக்குத் தெரியும்
எதிர்காலத்தில் எங்களின் முன்மொழிவுகளுக்கு பொதுத்துறை மற்றும் தனியார் துறையினர் பங்களிப்பார்கள் என நம்புகிறோம். அதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். விரைவான தீர்வுகள் தேவைப்படும் பிரச்சனைகள் என்னவென்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் பரிகாரம் என்னவென்று நமக்குத் தெரியும்.
முதல் விடயம், இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும். எல்லா உண்மையான தகவல்களையும் எங்களிடம் கூறுங்கள். இரண்டாவதாக, அனைத்து கடன் வழங்குநர்களுக்கும் சமமான கொள்கைகளை நாங்கள் விரும்புகிறோம்.
மூன்றாவதாக, இந்தக் கடன் வழங்குபவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் பேச்சுவார்த்தை கட்டமைப்பின் தேவை உள்ளது.
மேலும், நாட்டின் அரசியல் லட்சியம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவை கடன் வழங்குபவர்கள் மற்றும் பிற நிறுவனங்களுடன் கையாள்வதில் எங்களுக்கு உதவுகிறது. அதன் பின்னரே அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்மானத்தை எட்ட முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.