தமிழர்பகுதியில் ஆக்கிரமிப்பை தடுக்க பொதுக்கட்டமைப்பு உருவாக்கம் (Photos)
அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராகவும் தமிழர்களின் இருப்பை பாதுகாப்பதற்குமான பொதுக்கட்டமைப்பு ஒன்று வவுனியாவில் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழர் பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் அரசாங்கத்தின் நெருக்கடிகள் மற்றும் பௌத்தமயமாக்கல் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கான பொறிமுறைகளை செயற்படுத்துவதற்காக இக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல் ஒன்று வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (09.04.2023) இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த விடயங்கள் தொடர்பாக எதிர்வினையாற்றுவதற்காக இரு கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
7 பேர் கொண்ட கட்டமைப்பு
குறிப்பாக தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்கள் மற்றும் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், வனவளத் திணைக்களத்தால் காணிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றமை மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்புகள் தொடர்பான தரவுகளை சேகரித்து அவற்றை துல்லியமாக இனம் காண்பதற்காக 7 பேர் கொண்ட கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் மாபெரும் சாத்வீகப்போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்காக மற்றொரு கட்டமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் மதகுருமார்கள், தமிழரசுக் கட்சி, ஈழமக்கள்
புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் விடுதலை
கழகம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிச கட்சி,
தமிழர் விடுதலை கூட்டணி, ஜக்கிய தேசிய கட்சி, ஶ்ரீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
போன்ற அரசியல் கட்சிகளும், பொது அமைப்பினரும் கலந்து கொண்டுள்ளனர்.



