பிரித்தானியாவில் 13 மில்லியன் மக்களுக்கு கோவிட் - 19 தடுப்பூசி! வெளியான தகவல்
பிரித்தானியாவில் கோவிட் - 19 தடுப்பூசியில் முதல் டோஸ் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 13 மில்லியனை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினம் 1001 கோவிட் - 19 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மேலும் 13,013 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, பிரித்தானியாவில் கோவிட் - 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,985,161 உயர்ந்துள்ளது. அத்துடன், கோவிட் - 19 மரணங்களின் மொத்த எண்ணிக்கையும் 114,851 ஆக உயர்ந்துள்ளது. பிரித்தானியாவில் இதுவரையில் 13,058,298 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, லண்டனின் இம்பீரியல் கல்லூரி மேற்கொண்ட ஆய்வைத் தொடர்ந்து பசியின்மை மற்றும் தசை வலி உள்ளிட்டவை கோவிட் -19 இன் புதிய அறிகுறிகளாக இருக்கலாம் என்பது தெரியவந்தது.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, குளிர் மற்றும் தலைவலி ஆகியவை பிற புதிய அறிகுறிகளாகும். இந்நிலையில், கோவிட - 19 வைரஸின் பல வகைகள் தோன்றியதைத் தொடர்ந்து இலையுதிர்காலத்தில் மீண்டும் தடுப்பூசி போடுவதற்கான "யோசனையை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன கூறியுள்ளார்.
ஆக்ஸ்போர்டு / அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட மாறுபாட்டால் ஏற்படும் லேசான நோய்களுக்கு எதிராக மட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பை மட்டுமே அளிக்கக்கூடும் என்று கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.