ஒருவருக்கு 30 பிராணவாயு கொள்கலன்களை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படலாம் - ஹேமந்த ஹேரத்
நோயாளி ஒருவருக்கு ஒரு நாளில் வழங்கப்பட வேண்டிய பிராணவாயுவின் (ஒட்சிசன்) அளவு நோயாளிக்கு, நோயாளி வேறுபடும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதேபோல பிராணவாயு பெற்றுக்கொடுக்கும் முறையும் அதற்குள் உள்ளடங்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு நாளில் நோயாளிக்கு வழங்கப்படும் பிராணவாயு லீற்றர் அளவுகள், அந்த நோயாளிக்கு பிராணவாயு வழங்கப்படும் வேகத்திலேயே தங்கியுள்ளது.
எவ்வளவு பெரிய பிராணவாயு கொள்கலனாக இருந்தாலும் அவற்றை சில மணிநேரங்களுக்கு மாத்திரமே உபயோகிக்க முடியும்.
24 மணித்தியாலமும் பிராணவாயு தேவை ஏற்பட்டால் அவ்வாறான பிராணவாயு கொள்கலன்கள் 8 - 10 அல்லது 10 -12 கொள்கலன்கள் வரை தேவைப்படலாம்.
அதேபோல் பாவனைக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து பிராணவாயு கொள்கலன்களையும் மீள்நிரப்புவதற்காக அனுப்ப வேண்டும்.
அதே நேரத்தில் ஒரு தொகை பிராணவாயு கொள்கலன்களுக்கு நிரப்பப்பட்டிருக்க வேண்டும். இதை சாதாரணமாக சொல்லவதாக இருந்தால் ஒரு நோயாளிக்கு ஒரு நாளுக்கு 10 பிராணவாயு கொள்கலன்கள் தேவைப்படுமாக இருந்தால் அடுத்த 10 பிராணவாயு கொள்கலன்கள் கொண்டுவரப்படும் நிலையில் இருக்க வேண்டும்.
மேலும் 10 பிராணவாயு கொள்கலன்கள் தொழிற்சாலையில் இருக்க வேண்டும். அதனடிப்படையில் ஒரு நபருக்கு 30 பிராணவாயு கொள்கலன்களை தனியாக ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
இந்த எண்ணிக்கை நோயாளிகளின் நிலைமைக்கு அமைய வேறுபடும். இது சரியான எண்ணிக்கை அல்ல மாறாக எளிய முறையில் இந்த விடயத்தை தெளிவுபடுத்தினேன்.
பிராணவாயுவை பெற்றுக்கொடுக்க எமக்கு எவ்வளவு வளங்கள் அவசியமாகின்றது. எனினும் இதுவரை சுகாதார அமைச்சினால் அந்த வசதிகள் சரியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இருந்தாலும் நாட்டில் தற்பொழுது நோயாளர்கள் அதிகரிப்பதால் பிராணவாயுவை பெற்றுக்கொடுப்பது பாரிய சவாலாக மாறக்கூடும். ஆகவே நோயாளர்களை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.