தலைமன்னாரில் பிள்ளைகளை கடத்த முயற்சித்த இருவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
தலைமன்னாரில் 3 பிள்ளைகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த(11.05.2023)ஆம் திகதி மூன்று பெண் பிள்ளைகளை வீதியில் சென்ற வாகனத்தில் பயணித்த இருவர் கடத்துவதற்கு முயற்சித்ததாக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தலைமன்னாரிற்கு பொருட்களை விற்பனை செய்வதற்காக வருகை தந்த வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரையும் தலைமன்னார் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இதன்போது சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேகநபர்கள் கடைகளுக்கு பொருட்கள் விற்பனை செய்வதற்காக வந்துள்ளமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இதனை தொடர்ந்து சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பாடசாலைக்கு செல்கின்ற சிறுவர்களை கடத்த முற்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளமையினால் மன்னார் மாவட்டத்தில் வசிக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு அச்சப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |