பிள்ளையானுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின்(பிள்ளையான்) விளக்கமறியலை நீடித்து மட்டக்களப்பு நீதிமன்ற பதில் நீதவான் இன்று(18.08.2026) உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதி வரை பிள்ளையானை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிமன்ற பதில் நீதவான் மதுஜலா கேதீஸ்வரன் உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.
வழக்கு விசாரணை இன்று
கிழக்கு மாகாணத்தில் சில பகுதிகளில் ஐவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பிள்ளையான் உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, ஸ்கைப் தொழிநுட்பத்தின் ஊடாக பிள்ளையான் வழக்கு விசாரணைகளுக்கு முன்னிலையாகியிருந்தார்.
2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில், பிள்ளையான் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கடந்த ஜூன் 15ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
இவ்வழக்கில் மூன்றாவது சந்தேகநபராக பிள்ளையான் பெயரிடப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தகவலின்படி, 2008ஆம் ஆண்டு டி56 ரக துப்பாக்கிகள் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
2008ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி கல்லடி முருகன் கோவில் அருகே முன்னாள் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், அதேவருடம் மே 22ஆம் திகதி காத்தான்குடி பிரதான வீதியில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் அதே வருடத்தில் ஆகஸ்ட் 20ஆம் திகதி வவுணதீவு கொத்தியாபுல பகுதியில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஆகிய வழக்குகளுடன் தொடர்புபடுத்தி சந்திரகாந்தன் சந்தேகநபராக அடையாளப்படுத்தப்பட்டு இந்த வழக்கு முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
மேலதிக தகவல் - குமார்
பரபரப்பான கட்டத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு! அடுத்துவரும் நாட்களில் வெளிவரவுள்ள பல உண்மைகள்
you may like this video