கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள போராட்டம் குறித்து நீதிமன்றங்களின் உத்தரவு
நாமல் கருணாரத்ன (Namal Karunaratne) உள்ளிட்டோர் மேற்கொள்ளவுள்ள போராட்டத்தின் போது வீதிகளில் பல பிரவேசிப்பதற்கு தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் மற்றும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் ஆகியன உத்தரவு பிறப்பித்துள்ளன.
அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் மற்றும் பாற்பண்ணையாளர்களை பாதுகாக்கும் மத்திய நிலையம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று (03.07.2024) நடத்தவுள்ள போராட்டம் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாமல் கருணாரத்ன, டி.பி.சரத், சுசந்த குமார, சுமித் அத்தநாயக்க, பண்டார ரம்புக்வெல்ல, சோசிறி ரணசிங்க மற்றும் பால் பண்ணையாளர்களைப் பாதுகாக்கும் அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் நிலந்த சில்வா உள்ளிட்டவர்களுக்கு பல வீதிகளில் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை உரிமை
இதற்கமைய, ஓல்கெட் மாவத்தை டெலிகொம் சந்தியிலிருந்து செராமிக் சந்தி வரையிலான வீதியையும், செராமிக் சந்தியிலிருந்து என்.எஸ்.ஏ சுற்றுவட்ட வீதியையும், காலி ரவுண்டானா, என்.எஸ்.ஏ சுற்றுவட்டத்திலிருந்து சாரணர் மாவத்தை வரையிலான வீதியையும் கோட்டை பொலிஸ் பிரிவில் மறிக்க வேண்டாம் என போராட்டக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம், மத்திய வங்கி மற்றும் மிகச் சிறிய குழுவினர் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு பொறுப்பான அரச அதிகாரியின் முறையான அனுமதியுடன் மட்டுமே ஜனாதிபதி மாளிகைக்குள் நுழையலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 106(1)இன் படி பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு எதிராக போராட்டம் நடத்தவும் முடியாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேவேளை, நீதிமன்ற உத்தரவிற்கு இணங்கி சட்டவிரோதமாக நடந்து கொள்ளாமல் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான அடிப்படை உரிமையில் நீதிமன்றம் தலையிடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |