ஹிருணிகா மீது வழக்கு விசாரணை
இளைஞர் ஒருவரை கடத்தியதாக கூறப்பட்டும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சியங்கள் மீதான விசாரணை இன்று(09.05.2023) கொழும்பு மேல் நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான சாட்சியங்கள் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டன.
அமில பிரியங்க அமரசிங்க என்ற இளைஞர், 2015 ஆம் ஆண்டு தாம் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாகவும் பின்னர் தடுத்துவைக்கப்பட்டதாகவும் சாட்சியமளித்துள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் மறுப்பு
2015ஆம் ஆண்டு தெமட்டகொட பிரதேசத்தில் உள்ள ஆடையகம் ஒன்றில், தான் பணிபுரிந்த போது பெண் ஒருவர் அடிக்கடி அங்கு வந்து செல்வதாகவும், அதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் நட்பு ஏற்பட்டதாகவும் இந்த சம்பவத்தையடுத்தே தாம் கடத்தப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் 2017 ஆம் ஆண்டு ஹிருனிக்கா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் என
அடையாளம் காணப்பட்ட ஏழு பேர் தாம் இளைஞரை கடத்திய குற்றத்தை நீதிமன்றில்
ஏற்றுக்கொண்ட போதிலும் ஹிருனிக்கா பிரேமச்சந்திர, தமக்கு
எதிராக சுமத்தப்பட்ட எந்தவொரு குற்றச்சாட்டையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.