மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை: பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அரசாங்க அதிபர் விஜயம்
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாகவும் மாவட்டத்தின் பல பாகங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ள காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல்வேறு கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
மேலும் மன்னார் மூர் வீதி , உப்புக்குளம் , பள்ளிமுனை , சாந்திபுரம் , சௌத்பார், பனங்கட்டுகொட்டு , எமில் நகர் உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள பல வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
மேலும் தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த 4 நாட்களாக வெள்ள அனர்த்தம் காரணமாக தலைமன்னார் ஊர்மனை கிராமத்தின் வடக்கு மற்றும் தெற்கு கிராம அலுவலர் பிரிவுகளில் மழை வெள்ளத்தினால் சுமார் 50 குடும்பங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளது.
மழைநீர் தமது வீட்டிற்குள் புகுந்த நிலையில், குறித்த குடும்பங்கள் தங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். குறித்த பகுதி மிகவும் தாழ்வான பிரதேசம் என்பதால் மழை வெள்ள நீரை வெளியேற்றுவதில் பாரிய சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பகுதிக்கு இன்று(5) மதியம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ. ஸ்ரன்லி டிமெல் தலைமையில்,மன்னார் பிரதேச செயலாளர் எம். பிரதீப் மற்றும் கிராம சேவையாளர் உள்ளிட்ட கிராம மக்களின் பிரதிநிதிகள் குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த பகுதியில் தேங்கி உள்ள வெள்ள நீரை நாளைய தினம்(6) வெளியேற்றுவதற்கான நடவடிக்கையைக் கிராம மக்களுடன் இணைந்து மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.










