எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடரும் முறைகேடு! ஏமாற்றத்தில் மக்கள்
முழங்காவில் நாச்சிக்குடா சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முறைகேடு ஒன்று நேற்று(01) பதிவாகியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் முழங்காவில் நாச்சிக்குடா சந்தியில் அமைந்துள்ள பூநகரி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இவ்வாறு முறைகேடு இடம்பெற்றுள்ளது.
எரிபொருள் தீர்ந்துவிட்டதாக பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், கியூ.ஆர் பரிசோதனை இன்றி மோட்டார் சைக்கிள்கள் சிலவற்றுக்கு மீள் நிரப்பப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, கொள்கலன்களிற்கும் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் பூநகரி பிரதேச செயலாளர் அகிலன் கருத்து தெரிவிக்கும் போது, ”நேற்று முன்தினம் வரை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நாடு முழுவதும் கியூ.ஆர் அட்டை நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் எமது ஆளணியை நிறுத்திக்கொண்டோம். இந்த முறைப்பாடு தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படும்“என கூறியுள்ளார்.
நெல்லியடி
வடமராட்சியில் நேற்று(01) நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையம் குஞ்சர் கடை எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியவற்றில் பெட்ரோல் விநியோகம் கியூ.ஆர் முறை அடிப்படையில் வழங்கப்பட்டது.
நெல்லியடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினுடைய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரு தினங்களாக நூற்றுக்கணக்கான மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று(01) காலையில் இருந்து மாலை வரை பெட்ரோல் விநியோகம் இடம் பெற்றது. எனினும் நூற்றுக்கணக்கானவர்கள் பெட்ரோல் முடிவடைந்த நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
உடுப்பிட்டி
இதேவேளை உடுப்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினுடைய குஞ்சம் கடை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுமார் 3000 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டி என்பன காத்திருந்த நிலையில் பெட்ரோல் நிறைவடைந்து இரவு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.
மேலும் பருத்தித்துறை பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான வல்லெட்டித்துறை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று(01) பெட்ரோல் நிரப்பப்படும் என மக்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்து.
இந்நிலையில் பருத்தித்துறை பலநோக்குககூட்டுறவுச் சங்கம் பெட்ரோல் பெற்றுக்கொள்வதற்கான பணத்தினை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தாதன் காரணமாக நேற்று அங்கு பெட்ரோல் விநியோகம் இடம்பெறவில்லை. ஆனாால் அங்கு நூற்றுக்கணக்கான மோட்டார்சைக்கிள்கள் நீண்ட வரிசையில் அடுக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
நெல்லியடி மற்றும் குஞ்சம் கடை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குபடுத்தல் வழங்கிய நிலையில் இளைஞர் சேவை மன்ற அதிகாரிகள் கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆகியோர் கியூ.ஆர் பரிசோதிக்கும் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மதகுருமார் விசேட தேவையுடையோர் திடீர் மரண விசரணை அதிகாரி உட்பட பலருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பெட்ரோல் வழங்கப்பட்டது.
இதேவேளை குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மிக நீண்ட வரிசையில் டீசலை
பெற்றுக்கொள்வதற்காக கடந்த 3 நாட்களாக வரிசையில் டீசல் வாகனங்கள்
நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.