ஜனாதிபதி முன்வைத்த யோசனையை நிராகரித்த அரசியலமைப்பு பேரவை
சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் (Sanjay Rajaratnam) பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) முன்வைத்த யோசனையை அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ளது.
முன்னதாக, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான மூவர் குழுவில் இடம்பெற்றுள்ள சட்டமா அதிபரின் தொடர்ச்சியான சேவை அவசியம் என்ற வகையிலேயே அவரின் பதவிக்காலம் நீடிக்கப்படும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
எனினும், ஜனாதிபதியின் இந்த கருத்துக்கு கத்தோலிக்க சபை உட்பட்ட பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்தன.
முன்னுதாரணங்கள்
இந்நிலையில், சட்டமா அதிபரின் சேவை நீடிப்பு வழங்க எந்த சட்ட ஏற்பாடும் இல்லை என்று எதிர்க்கட்சியினர் வாதிட்டு வந்தனர்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆலோசனை வழங்கும் சட்ட ஆலோசகர் ஒருவர் இது தொடர்பில் தமது கட்சி உயர்நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அறிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், அரசாங்கத் தலைவர்கள் சேவை நீடிப்புக்கு முன்னுதாரணங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியிருந்தனர்.
அதுமாத்திரமன்றி, முன்னதாக சந்தன விக்ரமரத்ன பொலிஸ் மா அதிபராக இருந்த போது, அவருக்கு இரு வாரங்களுக்கு ஒருமுறை, ஜனாதிபதியின் பரிந்துரையின் பேரில் சேவை நீடிப்பு வழங்கப்பட்டதை அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |