தமிழ் பொது வேட்பாளருக்கான கடிதம் தொடர்பில் சுமந்திரன் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு
தமிழ் பொது வேட்பாளருக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் தெரிவித்த விடயம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளேன் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான கடிதத்தில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு பெருகிக்கொண்டு போகிறது என குறிப்பிட்டுள்ளார். இது தேர்தல் குற்றமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு கூறியுள்ளார்.
உயிர் அச்சுறுத்தல்
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“தமிழ் பொதுக்கட்டமைப்பினர் இலங்கை புலனாய்வு பிரிவின் மீது அதீத நம்பிக்கை கொண்டு அவர்களை நம்பும் நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழ் பொது வேட்பாளருக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக , முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு கண்காணிப்பு ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் பொது வேட்பாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அந்த கடிதத்தில். உங்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து காணப்படுவதாகவும், நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் அதிருப்தியில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தேர்தல் குற்றமாகும். இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளேன்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |