கல்வி அமைச்சுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
கல்வி அமைச்சுக்கு எதிராக சுதந்திர வழக்கறிஞர்கள் சங்கம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளது.
ஆறாம் தர மாணவர்களின் ஆங்கில செயன்முறைப் புத்தகத்தில் ஆபாச இணையத்தளம் ஒன்றின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த விடயம் குறித்தே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு மீது முறைப்பாடு
குறித்த விடயம், தங்களுக்குத் தெரியாமல் நடைபெற்றிருப்பதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டாலும், குறித்த பாடப்புத்தகத்தைக் கற்பித்தல் தொடர்பில், இலங்கை முழுவதும் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி ஐந்தாம் திகதி, தொடக்கம் அதனைக் கற்பிக்குமாறு பயிற்சியின் போது ஆசிரியர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறான நிலையில், இது குறித்து தாம் அறிந்திருக்கவில்லை என்று கல்வி அமைச்சு கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. கல்வி அமைச்சை தன்வசம் வைத்திருக்கும் பிரதமர், நாட்டின் இளம் தலைமுறையினர் மத்தியில் பாலியல் செயற்பாடுகளை தூண்டும் வகையில் செயற்படுவதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது.
இந்த விடயம் இலங்கையின் தண்டனைக் கோவைகள் சட்டம், குற்றவியல் சட்டம், ஆபாச வெளியீடுகள் சட்டம், மற்றும் 1998ம் ஆண்டின் 50ம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்புச் சட்டம் என்பவற்றின் விதிமுறைகளை தெளிவாக மீறும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே அதனுடன் தொடர்புடையவர்களைக் கண்டறிந்து தண்டனை பெற்றுக்கொடுக்குமாறு சுதந்திர வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் மைத்திரி குணரத்தின மற்றும் அதன் செயலாளர் அதுல டி சில்வா ஆகியோர் கூட்டாக சேர்ந்து குறித்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளனர்.