கொழும்பு செல்லும் பேருந்துகள் குறைவு: ஹட்டனில் நீண்ட வரிசையில் நின்று அவதியுறும் பயணிகள்
ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கி பயணிப்பதற்கு பேருந்துகள் இல்லாமல் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
இன்று(18.01.2026) ஹட்டன் பேருந்து நிலையத்தில் காலை 7 மணி முதல் காத்திருக்கும் பயணிகள், பேருந்துகள் போதியளவு சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளனர்.
வழக்கமாக பண்டிகை காலங்களில் ஹட்டன் பேருந்து தரிப்பிடத்தில் அதிக பயணிகள் வருகை தருவார்கள் என தெரிந்தும் போதுமான பேருந்துகள் இல்லை என்றும் பயணிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அவதியுறும் மக்கள்
பண்டிகையை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் தலைநகர் உள்ளிட்ட இடங்களுக்குத் திரும்புவதற்காக விசேட பேருந்து சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
ஆனால் போதியளவில் முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகியதோடு ஹட்டன் மத்திய பிரதான பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகள் நீண்ட நேரம் தூர சேவை பேருந்துகள் இன்மையால் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் இவ்வாறு அதிக பயணிகள் பயணம் செய்யும் காலங்களில் தேவைக்கேற்ப மேலதிக பேருந்துகளை சேவையில் அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
போதிய பேருந்து இல்லாத காரணத்தால் நீண்ட நேரத்திற்கு பேருந்து தரிப்பிடத்திலிருந்து செல்லும் பேருந்தில் பெரும்பாலான இருக்கைகள் உடனடியாக நிரம்பிவிடுவதால் பேருந்து நடுவில் நடைபாதை மற்றும் படிக்கட்டு அருகில் ஏராளமானவர்கள் அமர்ந்தும், நின்றும் பயணம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - திவா





