தியத்தலாவ விபத்து தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு
பதுளை-தியத்தலாவ ஃபாக்ஸ் ஹில் சுப்பர் க்ரோஸ் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பில் விசாரணை நடத்த மேஜர் ஜெனரல், ஒருவரின் தலைமையில் 07 சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய விசேட விசாரணைக் குழுவொன்றை நியமிக்க இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது.
இராணுவத் தலைமையகத்தினால் அமைக்கப்பட்ட இந்தக் குழு, சம்பவம் தொடர்பில் இராணுவத் தளபதிக்கு அறிவிக்கும் பணியை மேற்கொள்ளும் என்று இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.
விபத்து தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை ஆய்வாளர்கள் விசாரணைகளுக்காக பயன்படுத்துவார்கள். விபத்திற்கான காரணங்களைத் தீர்மானித்தல், பொறுப்பான தரப்பினரைக் கண்டறிதல், பார்வையாளர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துதல், பாதையின் தர உத்தரவாத செயல்முறைகளை மதிப்பீடு செய்தல் மற்றும் எதிர்கால விபத்துகளுக்கான தடுப்பு நடவடிக்கைகளைப் பரிந்துரைத்தல் உள்ளிட்ட பல பகுதிகளை விசாரணைக் குழு கவனிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு பந்தய சாரதிகளுக்கு விளக்கமறியல்
Fox Hill Supercross பந்தயம் 2024 ஏப்ரல் 21 அன்று நடைபெற்றது. இதில், 1500cc Ford Laser Mazda 323 பிரிவின் 17வது பந்தயத்தின் போது இரண்டு பந்தய கார்கள் கட்டுப்பாட்டை இழந்து பார்வையாளர்கள் மீது மோதியதில் எட்டு வயது குழந்தை உட்பட 7 பேர் கொல்லப்பட்டதுடன் 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள், தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 10 பேர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இந்தநிலையில், பந்தய நிகழ்வில் பங்குபற்றிய இரு பந்தய சாரதிகள் விபத்து தொடர்பில் கைதுசெய்யப்பட்டு ஏப்ரல் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பண்டாரவளை நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் |