நாடளாவிய ரீதியில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சைகள் ஆரம்பம்
2020ஆம் ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை நாடாளாவிய ரீதியில் இன்று ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில் நாடளாவிய ரீதியில் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு சுகாதார நடைமுறைகளை பேணி பரீட்சை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பரீட்சைக்கு வருகை தரும் மாணவர்களின் வெப்பநிலை அளவிடப்படுவதுடன், முகக்கவசம் அணிந்து, கைகளை கழுவிய பின்னர் பரீட்சை நிலையங்களிற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
எதிர்வரும் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 6 இலட்சத்து 22 ஆயிரத்து 352 பேர் தோற்றவுள்ளனர்.
இவர்களில் 4 இலட்சத்து 33 ஆயிரத்து 746 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர். அத்துடன் நாடு பூராகவும் 4513 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி
2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு கிளிநொச்சி கல்வி வலயத்தில் 5464 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
இதில் 3392 பாடசாலை பரீட்சார்த்திகளும், 2072 தனி பரீட்சார்த்திகளும் உள்ளடங்குகின்றனர்.
மேலும் 10 இணைப்பு நிலையங்களும், 40 பரீட்சை நிலையங்களும் கிளிநொச்சி கல்வி வலயத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
பரீட்சை்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்தோடு தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளிலிருந்து வரும் மாணவர்களுக்காக ஒவ்வொரு பரீட்சை நிலையங்களிலும் கோவிட் - 19 முன் ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் கோவிட் - 19 தொற்றுக்குள்ளான மாணவர்களுக்கு கிருஸ்ணபுரம் தொற்றுநோயியல் மருத்துவமனையிலும் பரீட்சை எழுதுவதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை கோவிட் - 19 தாக்கம் காரணமாகவோஅல்லது தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களிலிருந்தோ மாணவர்கள் பரீட்சைக்குதோற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி செய்தி - தமிழ்ச்செல்வன்
மலையகம்
இவ்வருடம் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மலையக மாணவர்கள் இன்றையதினம் ஆன்மீக நிலையங்கள் மற்றும் வீடுகளில் இறை வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் பரீட்சைக்குச் சென்றுள்ளனர்.
க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு நுவரெலியா மாவட்டத்திலிருந்து இம்முறை 25098 மாணவர்கள் தோற்றுகின்றனர். 179 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு
உலகத்தினையே தன்பால் ஈர்த்த சுனாமி பேபி எனப்படும் சுனாமியின்போது தெய்வாதீனமாக உயிர்தப்பிய ஜெயராஜா அபிலாசும் இன்று க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடத்தில் தற்போது வசித்துவரும் சுனாமி பேபி அபிலாஸ் இன்று செட்டிபாளையம் மகா வித்தியாலத்தில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு மிகவும் உற்சாகத்துடன் தோற்றியுள்ளார்.
செய்தி - குமார்
வவுனியா
இம்முறை சாதாரணதர பரீட்சைக்கு வவுனியாவில் 6631 மாணவர்கள் தகுதிபெற்றுள்ளதாக வவுனியா வலயக் கல்விப் பணிப்பாளர் மு.ராதாகிஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இப் பரீட்சையில் 3771 பேர் பாடசாலை பரீட்சாத்திகள் எனவும், 2860 பேர் வெளிவாரியாகவும் தோற்றுகின்றனர்.
அவர்களுக்காக 52 பரீட்சை நிலையங்களும், 14 இணைப்பு காரியாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
செய்தி - தீசன் மற்றும் திலீபன்
மன்னார்
மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளிலும் க.பொ.த சாதாரணதரப் பரீட்சை சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக ஆரம்பமாகி உள்ளது.
பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் நேரத்துடன் பரீட்சை மண்டபங்களுக்கு சென்றுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் 2245 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 2647 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தமாக 4892 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.











