கொழும்பில் பல வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை - அடகு கடையில் சிக்கிய பொருட்கள்
கொழும்பில் பல வீடுகளை உடைத்து திருடப்பட்ட தங்க நகைகளை அடகு வைத்துப் பெற்ற 16 லட்சம் ரூபாயை வங்கிக் கணக்கில் வைப்பிலிட்ட நபரை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து 5 அடகு பற்றுச்சீட்டுகள், 6 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் குறித்த 16 லட்சம் ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்ட வங்கிச் சேமிப்பு புத்தகம் ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான நபர் ஒருவர், பெருமளவில் போதைப்பொருளைக் கொள்வனவு செய்வதாகவும் அவரது வங்கிக் கணக்கில் பெருந்தொகையான பணம் இருப்பதாகவும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.
தங்க நகைகள் கொள்ளை
அதற்கமைய, நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒருகொடவத்தை பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரைச் சோதனையிட்ட போது, அவரிடமிருந்து ஹங்வெல்ல கிராண்ட்பாஸ் மற்றும் கடுவலை பகுதிகளில் உள்ள தனியார் அடகு மையங்களில் அடகு வைக்கப்பட்ட 7 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகளுக்கான 5 அடகு பற்றுச்சீட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
மேலதிக விசாரணைகளின் போது, கொஸ்கம பகுதியில் ஏழு வீடுகளை உடைத்துத் திருடிய நகைகளே இவை என்பது கண்டறியப்பட்டது.
போதைப்பொருள் பாவனை
குறித்த நகைகளை அடகு வைத்து சுமார் 18 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தைப் சந்தேகநபர் பெற்றுள்ளார்.
அதில் 16 லட்சம் ரூபாயை வங்கியில் வைப்பிலிட்டுள்ளார். அத்துடன் ஏனைய பணத்தைப் போதைப்பொருள் பாவனைக்காகச் செலவிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்தச் சந்தேகநபர் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சந்தேக நபரை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO
பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம்.. ஒளிபரப்பு நேரம், தேதி எப்போது தெரியுமா? Cineulagam