ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கோர விபத்தில் சிக்கி பலி! விபத்திற்கான காரணம் வெளியானது
கொழும்பு - குருநாகல் பிரதான வீதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விபத்தில் சிக்கி பலியாகியிருந்த நிலையில் விபத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.
கொழும்பு - குருநாகல் பிரதான வீதியின் துல்ஹிரிய பகுதியில் நேற்று (12.06.2023) டிப்பர் ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக வரக்காபொல பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இந்த விபத்தில் ரம்புக்கன, கொத்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.
தனுஷ்க கயான் பின்னவல, சின்ஹாசன வடு கம்லத்கே தினேஷா ஸ்ரீநானி கம்லத்கே, பின்னவல ஹேவயல கீத்மா தட்சர பின்னவல ஆகிய மூவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்திற்கான காரணம்
இவர்கள் மூவரும் காலி பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்தொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, வரக்காபொல துல்ஹிரிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டி திடீரென வீதியை கடந்து கொழும்பு நோக்கி சென்ற மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்துடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது முச்சக்கரவண்டியில் எரிபொருள் கசிவு ஏற்பட்டு வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளமை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த விபத்தை ஏற்படுத்திய 39 வயதான டிப்பர் வாகனத்தின் சாரதியை வரக்காபொல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது சாரதியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சந்தேகநபரிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லையெனவும், தனது நண்பனின் சாரதி அனுமதிப்பத்திரத்தினை வைத்து வாகனத்தை செலுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
மேலும், விபத்தில் உயிரிழந்த குடும்பஸ்தர் கடந்த மாதம் கட்டாரில் இருந்து நாட்டிற்கு வருதை தந்ததாகவும், எதிர்வரும் 15ஆம் திகதி மீண்டும் தொழில் நிமித்தம் கட்டார் செல்ல தயாராகியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |