கோட்டாபய, மஹிந்தவினால் திறக்கப்பட்ட “கோல்டன் கேட் கல்யாணி” அதி நவீன களனி பாலம் (Video)
கொழும்பின் புறநகர், பேலியகொடவில் “கோல்டன் கேட் கல்யாணி” (Golden Gate Kalyani”) என பெயரிடப்பட்டுள்ள அதிநவீன நவீன களனி பாலம் இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திறந்து வைக்கப்பட்டது.
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், ஆறு வழிப்பாதைகளைக் கொண்ட உயர் தொழில்நுட்பக் கேபிள்களுடன் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட முதல் பாலமாக இது அமைகிறது.
கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்டதன் பின்னர், நாளாந்தம் கொழும்பு நகருக்குள் வரும் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில் தற்போதுள்ள பாலத்தின் கொள்ளளவு அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் செல்ல போதுமானதாக இல்லாததால், புதிய பாலம் அமைக்கும் திட்டத்திற்கான பூர்வாங்கத் திட்டங்கள் 2014ல் ஆரம்பிக்கப்பட்டன.
"கோல்டன் கேட் கல்யாணி" இரண்டு கட்டங்களின் கீழ் கட்டப்பட்டது. கட்டுமானத்திற்காக முதல் கட்டத்தின் கீழ் 31,539 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. இரண்டாம் கட்டத்தின் கீழ் 9,896 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

