வெள்ளம் வடிந்த நிலையில் சமகிபுர கிராமங்களில் துப்புரவுப் பணிகள் ஆரம்பம்
அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தாலும் மினி சூறாவளியாலும் கடுமையான பாதிப்புகளை சந்தித்த சூரியபுர மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள சமகிபுர பகுதிகளில், வெள்ள நீர் படிப்படியாக குறைந்து வருவதையடுத்து துப்புரவு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
அதிக வெள்ளச் சேதத்தைச் சந்தித்த சமகிபுர பகுதியில், தேங்கி நின்ற நீர் முழுமையாக வடிந்ததைத் தொடர்ந்து, வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட கழிவுகள் மற்றும் சேற்றுக் குவியல்களை அகற்றும் பணிகளில் கந்தளாய் பொலிஸாரும் சூரியபுர பொலிஸரும் மற்றும் ஊர்காவல் படையினரும் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளப்பெருக்கு மற்றும் பலத்த காற்றினால் சூரியபுர, சமகிபுர, சமனல பாலம் உள்ளிட்ட கிராமங்களில் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்யும் நோக்கில், முறிந்து விழுந்த மரங்கள், தடையாக இருந்த கழிவுகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பகுதிகள் முன்னுரிமையாக தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று (03) காலை ஆரம்பிக்கப்பட்ட இந்த துப்புரவு நடவடிக்கைகளின் மூலம், பெருமளவில் பாதிக்கப்பட்ட இடங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
துப்புரவு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல், சேதமடைந்த வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகளைச் சீரமைத்தல் உள்ளிட்ட இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.