இலங்கைக்குள் நுழைய சீன ஆராய்ச்சி கப்பலுக்கு அனுமதி மறுப்பு
இலங்கை கடலின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட சீன ஆராய்ச்சிக் கப்பல், அந்த பகுதியில் தொடர்ந்து அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
நேற்றைய நிலவரப்படி மணிக்கு 13 கடல் மைல் வேகத்தில் குறித்த கப்பல் மாலைத்தீவை நோக்கிச் செல்வதைக் காண முடிந்தது.
சீன ஆராய்ச்சிக் கப்பல் இலங்கைக்கு வருவது தொடர்பாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் புதிய இராஜதந்திர முறுகல்கள் ஏற்பட்டுள்ளன.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
இலங்கைக் கடலில் சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் மீண்டும் மீண்டும் ஊடுருவி வருவது குறித்து இந்தியா கவலை தெரிவித்ததுடன், அவை தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறிவருகின்றது.
இதனையடுத்து, இலங்கை அரசாங்கம் தனது பிராந்திய கடற்பரப்பிற்குள் ஆய்வுகளை மேற்கொள்ளும் அனைத்து நாடுகளின் ஆய்வுக் கப்பல்களுக்கு ஓராண்டு தடை விதித்தது.
தடை இருந்த போதிலும், சீன அரசாங்கம் சியாங் யாங் ஹொங் 3 என்ற ஆய்வுக் கப்பலை இலங்கைக் கடலில் ஆய்வு நடவடிக்கைகளுக்கு அனுப்புவதற்கு முறைப்படி அனுமதி கோரியது.
இந்த நிலையில் கடந்த மாதம் 16 ஆம் திகதியன்று சீனாவில் உள்ள சான்யா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட சீன கப்பல், இலங்கைக்கான தமது பாதையை மாற்றி, நேரடியாக மாலைத்தீவுக்கு சென்று கொண்டிருக்கின்றது.
நேற்றைய நிலவரப்படி, சியாங் யாங் ஹொங் 3 இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் பயணத்தை தொடர்ந்தது. இதன்போது அந்த கப்பல் வெளிப்படுத்தப்படாத கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது.
சீன கப்பலின் நகர்வு
சீன கப்பலின் இந்த நகர்வு, இலங்கையின் தெற்கு கடற்கரையிலிருந்து 200 கடல் மைல்களுக்குள் உள்ள பகுதி நாட்டின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தின் கீழ் வருகின்றது.
சீனக் கப்பலின் இந்த நகர்வு, இந்த மண்டலத்தின் எல்லையை மீறுவதாகவே அமைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த சிக்கலை அதிகரிக்கும் வகையில், இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று கடந்த சனிக்கிழமை கொழும்புக்கு வந்து இலங்கை கடற்படை மரியாதையுடன் வரவேற்கப்பட்டது. இந்தியா இதனை ஒரு மூலோபாய வெற்றியாக பார்ப்பதாக சீன ஊடகங்கள் இந்தியாவின் கூற்றை எதிர்க்கின்றன.
இலங்கை மீதான இந்தியாவின் அழுத்தம் ஒரு வெற்றி அல்ல, மாறாக சங்கடத்தை ஏற்படுத்துகின்றது என்று அந்த ஊடகங்கள் கூறுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |