யாழ். ஊடக அமையத்துக்கு சீனத் தூதுவர் குழு விஜயம்
இலங்கைக்கான சீன நாட்டுத் தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong) தலைமையிலான குழுவினர் யாழ். ஊடக அமையத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த விஜயமானது நேற்று (19) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கலந்துரையாடல்
யாழ். ஊடக அமையத்தின் போசகர் இ.தயாபரன், தலைவர் கு.செல்வக்குமார் உள்ளிட்டோர் தூதுவரை வரவேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிகழ்வில், யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருக்கின்றது என்றே நான் நம்புகின்றேன்.
அந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருப்பதானது தமிழ் மக்கள் பரந்த சிந்தனையோடு விடயங்களை இப்போது நோக்க ஆரம்பித்திருக்கின்றார்கள் என்றே தோன்றுகின்றது.
யாழ்ப்பாணத்துக்கு வந்ததுள்ளமை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதிலும் அனைவரும் எதிர்பார்க்கின்ற ஊடக அமையத்துக்கு வந்துள்ளமை மேலும் சந்தோசமாக உள்ளது.
வடக்கு மாகாணத்தில் வாழுகின்ற எங்களுடைய சகோதர - சகோரிகளின் வாழ்க்கை முறை எவ்வாறு இருக்கின்றது, இங்கு அவர்கள் எவ்வாறு வாழ்கின்றார்கள், இந்த வாழ்க்கையை எவ்வாறு கொண்டு செல்கின்றார்கள் என்பவற்றை அறிந்துகொள்வதே எமது இந்தப் பயணத்தின் நோக்கமாக உள்ளது.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மிகப் பெரிய அளவில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. அதுவும் தெற்கை மையப்படுத்திய ஒரு தேசியக் கட்சிக்கு யாழ்ப்பாணத்திலும் மிகப் பெரும்பான்மையாக ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
நான் இன்று பருத்தித்துறைக்குச் சென்றிருந்தேன். அங்கு ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்த ஒரு வாக்கியத்தைப் பார்த்தேன். அதாவது பன்மைத்துவத்தில் ஒற்றுமை என்று இருந்தது. உண்மையில் அந்த வாக்கியம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சரியாவே பிரதிபலித்துள்ளது.
தற்போது இவையெல்லாம் யாழ்ப்பாணத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதையே காட்டுகின்றன. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நான் இங்கு விஐயம் செய்வது மிகவும் அர்த்தம் உள்ள ஒன்றாகவே கருதுகின்றேன். நான் வடக்கு மாகாணத்துக்கு முதல் தடவையாகக் கொவிட் கால கட்டத்திலேயே வந்திருந்தேன்.
அந்தக் கால கட்டத்திலேதான் சினோபாம் கொவிட் தடுப்பூசிகளை சீன அரசு இலங்கைக்கு வழங்கி இருந்தது. அப்போது சினோபாம் என்ற எமது தடுப்பூசிகளை வடக்கு, கிழக்கு முழுவதும் முழுமையாகப் பாவிக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் சீன அரசு வலியுறுத்திக் கூறியிருந்தது.
இவ்வாறு நாம் வலியுறுத்திக் கூறியதாலேயே இங்குள்ள மக்களுக்கும் அந்தத் தடுப்பூசிகள் பாவிக்கப்பட்டன. இவ்வாறு வடக்கு, கிழக்கிலுள்ள எங்களுடைய சகோதர - சகோதரிகளுக்கு நாம் தடுப்பூசிகளை வழங்கியதைத் தொடர்ந்து இங்குள்ளவர்களுக்கு எங்களுடைய பல்வேறு உதவிகளைச் செய்தோம்.
அதனடிப்படையில் வடக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கினோம். அதேபோன்று ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளையும், கடற்றொழில் உபகரணங்களையும் வழங்கினோம்.
அந்த ஆண்டின் முதல் அரைநாண்டு காலத்தில் சீன அரசால் பல மில்லியன் ரூபா பெறுமதியான உதவிகளை வடக்கு மாகாணத்துக்கு மட்டும் வழங்கியிருக்கின்றோம்.
இதற்கமைய வீட்டுத் திட்டம், அரிசி, மீன்பிடி உபகரணங்கள் என்பவற்றை வழங்கினோம். இவற்றில் அரிசியை முழுமையாக வழங்கியுள்ளோம். ஆனாலும், வீட்டுத் திட்டம் மற்றும் மீன்பிடி உபகரணங்களை இப்போதும் வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.
சீன அரசு வழங்கிய உதவிகளின் பட்டியல் இலங்கை அரசால் தயாரிக்கப்பட்டவைதான். அந்தப் பட்டியலுக்கமைய எமது உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. சீனாவினுடைய நீண்டகால நண்பனாக இலங்கை இருக்கின்றது.’’ என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |