தைவான் அருகே போர் பயிற்சி - அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா
தைவான் மீது சீனா படையெடுக்கும் பட்சத்தில், தைவானை பாதுகாக்க சீனாவுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் களமிறக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ள நிலையில், தைவானுக்கு அருகே சீன இராணுவம் போர் பயிற்சியை தொடங்கியுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி வரும் சீனா தேவை ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் என அச்சுறுத்தி வருகின்றது.
இந்த விவகாரத்தில் தைவானுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா, தைவானுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகிறது. இதை சீனா தொடர்ந்து கண்டித்து வருகிறது.
இந்த சூழலில் கடந்த இரு தினங்களுக்கு ஜப்பானில் நடைபெற்ற குவாட் மாநாட்டின் இடையே பத்திரிகையாளர்களிடம் தைவான் விவகாரம் குறித்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீனா, தைவான் மீது படையெடுத்தால் அதில் அமெரிக்க இராணுவம் தலையிட்டு தைவானை பாதுகாக்கும் என கூறினார்.
சமீப காலமாக தைவானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை சீனா முடுக்கிவிட்டுள்ளது. தைவானை வலுக்கட்டாயமாக கைப்பற்ற சீனா முயற்சிக்காது என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது. அமெரிக்கா தைவானுக்கு வெளிப்படையான பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குவதைத் தவிர்த்து வருகிறது.
அதனுடன் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் இல்லை என்ற போதிலும், தைவான் மீது சீனா படையெடுத்தால் அமெரிக்கா இராணுவ ரீதியாக தலையிடும். தைவானை பாதுகாக்க சீனாவுடன் போரிட அமெரிக்க இராணுவம் தயாராக உள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு தைவானைப் பாதுகாக்கும் பொறுப்பு இன்னும் கூடியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அமெரிக்க ஜனாதிபதி பைடனின் கருத்துக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவின் உறுதியை எந்த நாடும் குறைத்து மதிப்பிடக் கூடாது என சீன வெளிவிவகார அமைச்சு பதிலடி கொடுத்திருந்தது.
இவ்வாறான நிலையில், தைவானுக்கு அருகே சீன இராணுவம் போர் பயிற்சியை தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.