1.27 லட்சம் பிட்கொயின்களை கொள்ளையடித்த அமெரிக்கா! அம்பலப்படுத்திய சீனா..
தங்கள் நாட்டில் இருந்த கிரிப்டோ மைனிங் மையத்தில் இருந்து அமெரிக்கா சுமார் 1.27 லட்சம் பிட்கொயின்களை திருடிவிட்டதாகச் சீனா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இதன் தற்போதைய இந்திய மதிப்பு ரூ.116 லட்சம் கோடியாகும். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் நிலவி வரும்நிலையில், சீனா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
அமெரிக்க அரசு
அதாவது 2020ஆம் ஆண்டில் தங்கள் நாட்டில் இருந்த கிரிப்டோ மைனிங் மையத்தில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதலில் 13 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பிட்கொயின் திருடப்பட்டதாகவும் இதற்குப் பின்னணியில் அமெரிக்க அரசு இருப்பதாகவும் சீனா குற்றம் சாட்டியுள்ளது.

CVERC எனப்படும் சீனாவின் தேசிய கம்ப்யூட்டர் வைரஸ் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் மையம் இது குறித்து விரிவான ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது.
அதில் அப்போது உலகின் மிக பெரிய கிரிப்டோ சுரங்க நிறுவனங்களில் ஒன்றான லூபியனிடமிருந்து 1,27,272 பிட்கொயின்கள் திருடப்பட்ட நிலையில், அந்த சைபர் ஹேக்கிங் நிகழ்வுக்கு அமெரிக்கா தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய மதிப்பில் இந்த பிட்கொயின்களின் ஒட்டுமொத்த இந்திய மதிப்பு 116 லட்சம் கோடி ரூபாயாகும். CVERCஇன் அதிகாரப்பூர்வ வீசாட் கணக்கில் இது தொடர்பான முறைபாடு வெளியிடப்பட்டது. அதில் இந்தச் சம்பவம் ஒரு சாதாரண சைபர் திருட்டுக் கும்பலின் வேலை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைபர் திருட்டு
அதற்கான காரணத்தையும் அவர்கள் விளக்கியுள்ளனர். அதாவது ட்ரம்ப் முதல்முறை ஜனாதிபதி இருந்தபோது அவரது பதவிக்காலம் முடிவடையச் சில காலம் இருந்தபோது இந்த சைபர் திருட்டு நடந்துள்ளது.
இருப்பினும், அதன் பிறகு நான்கு ஆண்டுகளாக அந்த பிட்கொயின் ஒரே வாலட்டில் வைக்கப்பட்டு இருந்ததை CVERC சுட்டிக்காட்டியது. எப்போதும் பணம் பார்க்க விரும்பும் ஹேக்கர்கள் உடனடியாக ஹேக் செய்த பணத்தை விற்றுவிடுவார்கள்.

ஆனால், இந்தச் சம்பவத்தில் சுமார் 4 ஆண்டுகள் அந்த பிட்கொயின் அதே வாலட்டில் இருந்துள்ளது. இதை வைத்துப் பார்த்தால் அது ஒரு ஹேக்கிங் அமைப்பால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஒரு துல்லியமான நடவடிக்கை போலவே தெரிகிறது.
மேலும், கடந்த ஒக்டோபர் மாதம் சென் ச்சி என்ற கோடீஸ்வரருக்கு எதிராக அமெரிக்கா எடுத்த நடவடிக்கையையும் சீனாவின் CVERC சுட்டிக்காட்டுகிறது.
சீனா கிரிப்டோ மையம்
சீனாவில் பிறந்த கம்போடிய கோடீஸ்வரரும், பிரின்ஸ் என்ற குழுமத்தின் தலைவருமான சென் ச்சி மீது அமெரிக்க நீதித்துறை பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

அவர் பல்வேறு மோசடிகளிலும் ஈடுபட்டதாகச் சொல்லி வழக்குப்பதிவு செய்திருந்தது. மேலும், அவரிடம் இருந்து 127,271 பிட்கொயின்களை பறிமுதல் செய்வதாகவும், இது எந்த நாட்டிலும் இல்லாத மிக பெரிய பறிமுதல் என்றும் அமெரிக்கா கூறியிருந்தது.
சரியாகச் சீனா கிரிப்டோ மையத்தில் இருந்து எவ்வளவு பிட்கொயின் திருடப்பட்டதோ அதே அளவு பிட்கொயின் 4 ஆண்டுகள் கழித்து பறிமுதல் எனச் சொல்லப்பட்டு இருப்பதாக சீனா கூறுகிறது.
மேலும், இந்த பிட்கொயின்களை எப்படி கைப்பற்றப்பட்டது என சென் தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டபோதும் அது குறித்த தகவல்களை அமெரிக்கா நீதித்துறை பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டது என்பதையும் சீனா சுட்டிக்காட்டியிருக்கிறது.