பிள்ளையான் மீது நேருக்கு நேர் பகிரங்க குற்றச்சாட்டுக்களை அடுத்தடுத்து முன்வைத்த சாணக்கியன் (Photos)
அபிவிருத்தி குழுக்கூட்டம் என்ற பெயரில் காணிகளை அபகரிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (Sivanesathurai Chandrakanthan) துணை போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiya Rasamanickam) பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.
திரைமறைவில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை
பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டங்களை நடத்தாமல் நேற்றைய தினம் (03.11.2022) வாகரை பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டத்தை மாத்திரமே நடத்தியுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் (04.11.2022) மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் நடத்தப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் இதனை ஒரு சதி நடவடிக்கையாகவே பார்ப்பதாகவும், குறிப்பாக வாகரையினை முற்றாக அரசாங்கத்திற்கு தாரை வார்ப்பதற்குரிய நடவடிக்கைகள் திரைமறைவில் முன்னெடுக்கப்படுவதாகவும் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த குற்றச்சாட்டுக்களை பகிரங்கமாக முன்வைத்துள்ளார்.
இதன்போது சாணக்கியன் மேலும் கூறுகையில், குறிப்பாக வாகரையில் இறால் வளர்ப்பு திட்டம் மற்றும் காணிகளை வழங்கும் திட்டங்களில் பாரியளவில் மோசடிகள் இடம்பெற்று வருகின்றன.
சேதனப்பசளை என்ற பெயரில் ஊழல் மோசடிகள்

அதேபோன்று சேதனப்பசளை என்ற பெயரில் ஊழல் மோசடிகள் இடம்பெறுகிறது. இதற்கும் பிள்ளையான் துணை போகின்றார்.
அத்துடன், அபிவிருத்தி குழுக்கூட்டங்களுக்கான அறிவிப்புகள் எங்களுக்கு முறையாக விடுக்கப்படுவதில்லை. நான் இந்த கூட்டங்களில் பங்கேற்கக்கூடாது என்ற எண்ணத்திலேயே எனக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை.
எனினும், எந்த சந்தர்ப்பத்திலும் மக்களுக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் நான் குரல் கொடுக்க பின்னிற்கப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.






