கர்தினால் மெல்கம் ரஞ்சித் மீது பாரதூரமான குற்றச்சாட்டு சுமத்தும் சாமர
நாட்டின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலையீடு செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இராணுவ தளபதி நியமன விவகாரம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள நடவடிக்கைகள் போன்றவற்றில் கர்தினால் முக்கிய தீர்மானங்களை எடுப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தற்போதைய இராணுவ தளபதியின் பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர் பெர்னாண்டோ ஒருவர் பதவி ஏற்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் ஊடாக பௌத்தர் அல்லாத ஒருவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட உள்ளதாக அவர் சூசகமாக சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இராணுவ தளபதியின் பதவிக்காலம் பூர்த்தி அடைந்தபோதிலும் மீண்டும் பதவி காலத்தை நீட்டித்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்பொழுது பதவி வகிக்கும் இராணுவ தளபதியின் பதவிக்காலம் எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் வரையில் நீடிக்கப்படும் சாத்தியங்கள் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத் தளபதி பதவியை வகிக்க காத்திருக்கும் அடுத்த பதவி நிலையில் இருக்கும் மேஜர் ஜெனரால் நிலந்த பிரேமரட்ன, மேஜர் ஜெனரல் உடுகம, மேஜர் ஜெனரல் ஜெனரல் நளின் பண்டாரநாயக்க போன்றவர்களை ராணுவ தளபதி பதவியை ஒரு நாளேனும் வகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
அவர்கள் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவ தளபதி பதவிக்கு கிறிஸ்தவர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதா அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அருட்தந்தையர்கள் மட்டக்களப்பிற்கு சென்று ராணுவத்தினரின் ஆடம்பர விடுதி ஒன்றில் தங்கி இருந்ததாகவும் இராணுவத்தினர் அவர்களுக்கு உணவு பானங்களை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
மகாநாயக்க தேரர்களிடம் சென்று மூன்று மாதத்திற்கு ஒரு தடவை வணங்கி வந்தாலும் இராணுவ உயர் பதவி நியமனங்கள் மற்றும் புலனாய்வு பிரிவு நடவடிக்கைகள் என்பன கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு தேவையான வகையில் இயக்கப்படுவதாக சாமர சம்பத் தசநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.