இரு முக்கிய நிதி நிறுவனங்களுக்கு எதிராக மத்திய வங்கியின் அதிரடி நடவடிக்கை
பணமோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் ஆகிய ஒழுங்குவிதிகளைப் பின்பற்றத் தவறிய இரண்டு நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு (FIU) மொத்தமாக 3.3 மில்லியன் ரூபா அபராதம் விதித்துள்ளது.
நிதி கொடுக்கல் வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் கீழ், 2026 ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற விதிமீறல்கள் தொடர்பில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி இன்று (18) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஐக்கிய நாடுகள் சபையின் தடைகளுக்கு உள்ளான நபரொருவருடன் வர்த்தகத் தொடர்புகளைப் பேணியமைக்காக கொமர்ஷல் கிரெடிட் அண்ட் பைனான்ஸ் பி.எல்.சி (Commercial Credit & Finance PLC) நிறுவனத்திற்கு 3 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
வாடிக்கையாளர்களை முறையாக அடையாளம் காணத் தவறியமை, தடை செய்யப்பட்ட நபர்களின் பட்டியலுடன் வாடிக்கையாளர் தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்காமை மற்றும் உரிய நேரத்தில் தமது உள்ளகக் கட்டமைப்புகளை இற்றைப்படுத்தாமை ஆகியன கள ஆய்வின் போது கண்டறியப்பட்டதையடுத்து, ஏப்ரல் 09 ஆம் திகதி விதிக்கப்பட்ட இந்த அபராதம் அதே மாதம் 21 ஆம் திகதி அந்நிறுவனத்தால் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்டாய வாடிக்கையாளர் சரிபார்ப்பு (CDD) நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியமைக்காக நியூ நடாஷா பிரைவேட் லிமிடெட் (New Natasha Pvt Ltd) நிறுவனத்திற்கு 300,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
200,000 ரூபாவிற்கும் அதிகமான கொடுக்கல் வாங்கல்களின் போது நிதியின் மூலம், நோக்கம், வாடிக்கையாளரின் தொழில் மற்றும் அரசியல் ரீதியாக செல்வாக்கு மிக்க நபரா போன்ற அத்தியாவசிய தகவல்களைப் பெறத் தவறியமை மற்றும் ஆபத்து மதிப்பீடுகளை மேற்கொள்ளாமை ஆகிய காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த நிறுவனத்திற்கும் தடை செய்யப்பட்ட நபர்களுக்கும் இடையில் எவ்வித வர்த்தகத் தொடர்புகளும் கண்டறியப்படவில்லை எனவும், நாட்டின் நிதி நிறுவனங்கள் சட்ட விதிகளுக்கு அமைய செயற்படுவதை உறுதிப்படுத்துவதே தமது பிரதான பொறுப்பு எனவும் நிதிப் புலனாய்வுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.