சிதையும் தமிழ்த் தேசியமும் ஜனாதிபதித் தேர்தலும்
இலங்கைத்தீவு ஜனாதிபதித் தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறது. இந்த தேர்தலை பல்வகைப்பட்ட நெருக்கடிகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் பட்டினி சர்வதேசமும், பிராந்தி அரசியலும் தமக்கு ஏற்ற வகையில் கையாள முயற்சிக்கின்றன.
அதேநேரம் சிங்கள தேசத்தின் ஆளுங்குழாம் தமக்கிடையே ஆதிக்கச் சண்டையில் ஈடுபடுவதோடு அதிகாரத்தை தமக்கு இடையே பங்கிடுவதற்கான உள்ளக பஞ்சாயத்துக்களையும் நடத்திக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய சூழலில் அரசியல் அதிகாரத்தை பெறுவதற்காக போராடுகின்ற தமிழ் தேசிய இனம் இந்தத் தேர்தலில் தனக்குரிய வகிபாகத்தை எவ்வாறு வகிக்கப் போகிறது என்பதுதான் ஈழத் தமிழ்மக்கள் முன்னால் உள்ள கேள்வியாகும்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் ஈழத் தமிழ் மக்கள் தமது தேசியத்தை நிலைநாட்டவும், மீள் கட்டுமானம் செய்யவும், தமிழ் மக்களையும், தமிழ் அரசியல் கட்சிகளையும் ஐக்கியப்படுத்துவதற்குமான ஒரு வாய்ப்பையும் தந்திருக்கிறது.
சிங்கள தேசத்தின் தலைவனை தெரிவு செய்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் தமது தேசியத்தையும், தேசிய ஒருமைப்பாட்டையும் வெளிக்காட்டுகின்ற, வெளிக்காட்டக்கூடிய ஒரு தேர்தலாக இதனை மாற்றி அமைத்து பயன்படுத்த வேண்டும்.
இப்போது இங்கே தேசியம் என்றால் என்ன என்பது பற்றிய புரிதல் தமிழ் தலைவர்களிடமும் இல்லை. தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் என்று சொல்லப்படுபவர்களிடமும் இல்லை.
கோட்பாட்டு ரீதியான விளக்கம்
பொதுவாக தமிழ் அரசியல் பரப்பிலுள்ளவர்களிடம் தேசியம் என்றால் என்ன என்பதற்கான கோட்பாட்டு ரீதியான விளக்கம் இன்மையையே அவதானிக்க முடிகிறது. எனவே தேசியம் என்ற அந்த சூக்குமப் சொல்லுக்கான தத்துவார்த்த விளக்கம் என்ன என்பதை பற்றி முதலில் பார்த்து விடவேண்டும்.
தேசியம் எனப்படுவது குறித்த ஒரு மக்கள் கூட்டம் பிரதேசம், இனம், மொழி, மதம், பண்பாடு, வாழ்க்கை முறை என்பனவற்றில் ஏதோ ஒரு குறித்த தனித்துவத்தின் அடிப்படையில் அச்சமுதாய வாழ்வியல் அபிலாசையை பூர்த்தி செய்வதற்காக சமூகத்தின் ஒவ்வொரு தனி மனிதர்களினதும் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் உள்ளார்ந்த தனித்துவமான கூட்டு மனவுணர்வும், மனவிருப்பிலான நடத்தையும், செயற்பாடும் அதன் விளைவாக ஏற்படுத்துகின்ற சமூக ஒருமைப்பாடே தேசியம் எனப்படும்.
இத்தகைய தேசிய உணர்வு ஒரு மக்கள் கூட்டத்திடம் மேலோங்குகின்ற போது அது செயற்பாட்டு தளத்தில் தேசியவாதமாக உருத்திரண்டு மக்கள் கூட்டத்தை வழிநடத்திச் செல்லும். இத்தகைய தேசியவாதத்தை இவ்வாறுதான் வியாக்கியானப்படுத்த முடியும்.
உலகளாவிய ரீதியில் ஜனநாயக அரசுகளாயினும் சரி, சோசலிச அரசுகளாயினும் சரி தேசிய இனங்கள் ஆயினும் சரி அல்லது ஒரு மக்கள் கூட்டம் என்றாயினும் சரி இவை அனைத்தும் தேசியவாதத்திற்கு கீழ்ப்பட்டவைகளாகவே உள்ளன.
தேசியவாதம் என்பது ஒரு மக்கள் கூட்டம் குறித்த தனித்துவத்தின் அடிப்படையிலான ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சமாதானம்-பாதுகாப்பு என்பனவற்றை உள்ளடக்கியதோடு அச்சமுகத்தை சார்ந்திருக்கக்கூடிய வளங்களையும், அவர்களது பண்பாட்டையும், அவர்களுக்குள் பொதிந்திருக்கும் ஆக்கத் திறன்களையும் வளர்த்து முன்னேற்றவல்ல ஒரு பாதுகாப்பு கவசமாகவும், சமூக ஒருமைப்பாட்டையும், ஆளுமை விருத்தியையும் சமூக பொருளாதார மேன்மையையும் ஈட்டவல்ல ஒரு வழிமுறையாகவும் அனைத்துவகை ஆதிக்கங்களையும் எதிர்த்து அரசியல் அதிகாரத்தில் மக்களை சமபங்காளியாக்குவதும் சமுக முன்னேற்றத்திற்குமான ஒரு கோட்பாடும் நடைமுறையுமே தேசியவாதமாகும்.
தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் ஒரு தமிழ் தேசியவாத கட்டமைப்பை ஆயுதப் பிரயோகத்தின் மூலம் விரைவாக கட்டமைப்புச் செய்தது. வளர்ச்சி என்பது நிலையானதாகவும் படிமுறையாகவும் கட்டமைப்புச் செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யப்படாமல் சடுதியான வளர்ச்சி என்பது உறுதியானதும் நிலையான வளர்ச்சியாகவும் அமைவதற்கான வாய்ப்புகள் அரிது.
முள்ளிவாய்க்கால் மனித பேரழிவு
ஆயுதப் போராட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அந்த விரைவான தமிழ் தேசிய கட்டுமானம் ஆயுதப் போராட்டம் நீண்ட காலத்துக்கு நிலை பெற்றிருந்தால் நிச்சயமாக நிலையான, உறுதியான தமிழ் தேசியமாக நிலை பெற்றிருக்கும். அவ்வாறு நிலை பெற்றிருந்தால் இன்றைய தமிழ் தேசிய சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருக்காது.
மாறாக ஒரு நிலையான, வலுவான தேசியவாத கட்டமைப்பு ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் நிலை பெற்றிருக்கும். துரதிஷ்டவசமாக தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி முடக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசியம் தொடர் சிதைவுக்கும், சீரழிவிக்கும் உட்பட்டிருக்கிறது.
இந்தப் சீரழிவை தடுத்து நிறுத்த வேண்டிய தமிழ் மிதவாத அரசியல் தரப்புக்கள் தவறிவிட்டன. அல்லது அவர்களால் தமிழ்த் தேசியக் கட்டுமானத்தை தொடர்ந்து தக்கவைக்க முடியாமல் போய்விட்டது. இது தமிழ் தலைமைகளின் இயலாமை என்பதா? கையாலாகத்தனம் என்பதா? அல்லது அரச அறிவியலின் வறுமை என்பதா?
முள்ளி வாய்க்கால் பேரவலம் தமிழ் மக்களுக்கு பெரும் அழிவை தந்தாலும் அது இனப்படுகொலை என்கின்ற ஒரு வரத்தையும் விட்டுச் சென்றது. ஆனாலும் இனப்படுகொலை என்ற அந்த வரத்தை தமிழ் தலைமைகள் சாபமாக்கிவிட்டனர். அல்லது சரியாக கையாளாமல் தவறவிட்டு விட்டனர்.
ஆனால் அன்றைய காலத்தில் தமிழ்த் தேசியம் உணர்ச்சித் தளத்தில் முனைப்பு பெற்றே இருந்தது. பின்னாளில் தமிழ்த் தேசியத்தின் அரசியல் சக்தியாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல துண்டுகளாக சிதறுண்டு இன்று அனைத்து தமிழ் தலைமைகளும் தனித்தனி வழியில் பயணிப்பவர்களாக தென்படுகிறார்கள்.
தனித்தனியே பயணித்துக் கொண்டு தமிழ் தேசியம் என்று யாராலும் பேச முடியாது. கூட்டாக இருப்பதுதானே தேசியம்? இங்கே தனிமையாக இருந்து கொண்டு தேசியம் என்று பேசுவது விந்தையானது.
இப்போது தமிழ் தேசியம் சிதைவுக்கு உள்ளாகி இருக்கிறது, சீரழிவிற்கு உள்ளாகி இருக்கிறது, ஆபத்துக்குள்ளாகி இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழ் மக்களின் நலன்
ஆனாலும் ஈழத் தமிழ் அரசியல் பரப்பில் தமிழ்த்தேசியம் என்ற சொல் எல்லோராலும் உச்சரிக்கப்படுகிறது . எல்லோரும் தமிழ்த் தேசியத்தின் காவலர்களாக தம்மை காட்ட முற்படுகிறார்கள். தேசியம்.. தேசியம்… என்று அடிக்கடி மந்திர உச்சாடனமாக உச்சரித்து விட்டால் மாத்திரம் அது தேசியம் ஆகிவிடாது.
ஒட்டுமொத்த தமிழ் மக்களின் நலனுக்காக ஒவ்வொருவருடைய உணர்வினாலும், செயல்களாலும் அது நிரூபிக்கப்பட வேண்டும். இங்கே தமிழ் தேசியம் என்று ஊளை இடுகின்ற அனைவரும் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான திசையில் செல்வதையே தமிழ் தேசியத்திற்கான கோட்பாட்டு விளக்கம் கோடிட்டு காட்டுகிறது.
“ஆண்ட பரம்பரை இன்னும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன தவறு" "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" இந்தக் கூற்று கோஷமிடுவதற்கு நன்றாகத்தான் இருக்கிறது.
மேடைகளிலே ஒலிவாங்கியை பிடித்து முழங்குகின்ற போது ஒவ்வொரு தமிழனுடைய உடலிலும் மின்சாரம் பாயும், மயிர்க்கூச் செறியும், உணர்ச்சி மேலிடும், தொண்டையில் இருந்து வாய்க்குள்ளால் சொல் வருவதற்கு தடங்கல்கள் ஏற்படும் , இதயத்துடிப்பு அதிகரிக்கும், உதடுகள் நடுங்கும், உடலில் உடலின் உள்ளே ஆயிரம் யானைகள் புகுந்தது போல பலம் அதிகரிப்பதாகத் தோன்றும், மனம் எதையும் செய்ய தயாராகும். அந்தக் கணத்தில் எம்மை சுற்றியுள்ள அனைத்தும் கண்ணுக்குத் தெரியாது. விடுதலையும் விடுதலை வேட்கையும் மட்டுமே தெரியும்.
ஆனாலும் குறிப்பிட்ட கணங்களில் இவை கலைந்து போய்விடும். ஏன் இந்த உணர்வு மாற்றம்? அது தமிழ் தேசியம் என்கின்ற உணர்வுதான் ஆனாலும் அந்த உணர்வை தொடர்ந்து தக்கவைத்து செயற்பாட்டு தளத்துக்குச் செல்ல உன்னால் முடிகிறதா என்றால் இப்போது, இன்றைய நிலையில் இல்லவே இல்லை என்பதுதான் பதில்.
ஆகவே தமிழ் தேசியம் என்கின்ற ஆத்மாத்தமான அந்த மன உணர்வு ஏன் செயற்பாட்டு தளத்தில் இப்போது நின்று பிடிக்க முடியவில்லை? அதற்கான காரண காரியங்கள் பற்றி அறிவியல் பூர்வமாக, தத்துவார்த்த ரீதியாக, கோட்பாட்டு ரீதியாக, சமூகவியல் ரீதியாக ஆராயப்பட வேண்டும்.
அவ்வாறு ஆராய்ந்து எவ்வாறு இதனை ஒரு செயற்பாட்டு தளத்தில் தொடர்ந்து தக்க வைக்கமுடியும் என்பதற்கான விஞ்ஞான ரீதியான ஆய்வு முடிவுகளுக்கு தமிழினம் செல்ல வேண்டும்.
இல்லையேல் தமிழ் தேசியம் என்பது கானல் நீராகவே தமிழ் மக்களின் அரசியலில் தோன்றி தமிழ் மக்களை வழிநடத்தி தமிழ் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க முடியாமல் பகற்கனவாய் பாழாய் போகும்.
ஜனாதிபதித் தேர்தல்
இதுவே தமிழ் அரசியல் வரலாறாக வரலாற்றுப் பரப்பில் பதியப்பட்டு விடும். அது மாத்திரமல்ல எந்த அரசியல் உரிமைகளையும் பெறாது வெறும் கோஷமிடும், கூக்குரலிடம், ஒப்பாரி வைக்கும் ஒரு மக்கள் கூட்டமாகவே வாழ்ந்து சிதைவடையும் மக்கள் கூட்டமாக தமிழினம் இருக்கும்.
தமிழ் மக்களும் தமிழ் தலைமைகளும் ஒன்றுபடுவதற்கான ஒரு தளமாக இன்றைய ஜனாதிபதி தேர்தல் அமைந்திருக்கிறது. இதனை சரிவர பயன்படுத்த வேண்டும். முதலில் ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும். அவ்வாறு மக்களால் ஏற்றுக்கொள்ளப்படத் தக்க ஒரு வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் தமிழ் மக்களை ஐக்கியப்படுத்த முடியும்.
அந்த ஐக்கியத்தின் ஊடாக அனைத்துக் கட்சிகளையும் ஏதோ ஒரு புள்ளியில் சந்திக்கவும், சங்கமிக்க வைக்க முடியும்.
வெறும் கோசமிடுவதையும், கூட்டம் கூடுவதையும், அபிப்பிராயங்களை தெரிவிப்பதையும் விடுத்து முதலில் செயலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். முதலில் ஒருவரை பொதுவேட்பாளராக நிறுத்துங்கள்.
பின்னர் அதனைத் தொடர்ந்து அனைத்தும் ஒன்றுதிரளும். இதுவே எதார்த்தம். அதைவிடுத்து வீண்வார்த்தைகள் பேசி வீண்விவாதங்கள் நடத்தி, வீண்பேட்டிகள் கொடுத்து காலத்தை தாமதித்து குற்றுயிறாய்க் கிடக்கும் தமிழ் தேசியத்தை சாகடிக்காதீர்! சாகடிக்காதீர் !!!
இந்த வரலாற்று சிதைவிலிருந்து, அழிவிலிருந்து ஈழத் தமிழர்களை பாதுகாப்பதற்கு தமிழ்த் தேசியத்தை நிலைநாட்டுவதற்கு தமிழ் தலைவர்கள் அனைவரும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து தமிழ்த் தேசியம் என்ற ஒருமித்த நிலைப்பாட்டில் ஒரு பொது ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தி தமிழ் மக்களுடைய வாக்குகளை ஒன்று குவித்து தமிழ்த் தேசியத்தின் பெயரால் ஒரு மக்கள் ஆணையை பெறுவதுதான் இன்றைய காலத்தின் தேவையாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 28 April, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.