காப்பாற்றுமாறு கண்ணீர் சிந்தும் கனடா செல்ல முற்பட்ட பல ஆண்கள்!(Video)
நாங்கள் நாட்டை வெறுத்து வேறு நாட்டிற்கு செல்லவில்லை எமது பிள்ளைகளும் குடும்பமும் நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணத்திலே இவ்வாறு வேறு நாட்டிற்கு சென்றோம் என இந்தியா பெங்களூர் சிறையிலிருக்கும் இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.
கனடா செல்வதாக ஏமாற்றப்பட்டு இந்தியாவின் கர்நாடக பகுதியில் 38 ஆண்கள் முகவர்களால் இறக்கிவிடப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி குறித்த முகவர்கள் அவர்கள் கனடா செல்ல முயற்சிப்பதாக கூறி அதிகாரிகளிடம் தகவல் வழங்கி உள்ளனர்.
இதனையடுத்து குறித்த 38 ஆண்களும் இந்திய பெங்களூர் சிறையில் சுமார் 2 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் தமது தவறை மன்னித்து தம்மை நாட்டுக்கு மீட்டெடுக்குமாறு கூறி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தயவு செய்து காப்பாற்றுங்கள்...!
இது தொடர்பில் இந்திய சிறையிலுள்ள ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் நாட்டை வெறுத்து செல்லவில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக வேறு நாட்டிற்கு சென்று வேலை செய்ய முயற்சித்தோம்.அதன்காரணமாக கனடா அனுப்புவதாக கூறி ஒரு முகவர் எங்களை இந்தியாவிற்கு அழைத்து வந்தார்.
இந்தியா வரும் வரை நாங்கள் எங்கு இருக்கின்றோம் என எங்களுக்கு தெரியாது. இங்கு அழைத்து வந்தது மட்டுமல்லாமல் எங்களை அதிகாரிகளிடம் அந்த முகவரி காட்டி கொடுத்து சிறையில் அடைக்க வைத்தார்.
நாங்கள் 2021 ஆண்டு 6 மாதம் முதல் இங்கு சிறையில் இருக்கிறோம். எங்களுக்கு ஒழுங்கான உணவு இல்லை. எங்களின் உடமைகளையும் பறித்துக்கொண்டனர்.
இன்னும் இரு மாதங்களில் நாட்டிற்கு அனுப்புகிறோம் என வந்த நாட்களில் இருந்து சொல்கின்றார்கள். ஆனால் இதுவரை ஒரு முடிவும் கிடைக்கவில்லை.
எனவே எமது நாட்டு அதிகாரிகளிடம் கெஞ்சி கேட்கின்றோம். தயவு செய்து எங்களை நாட்டிற்கு எடுங்கள். நீங்கள் யாரிடம் பேச சொன்னாலும் பேசுகின்றோம். என்ன வேண்டுமானாலும் செய்கின்றோம்.”என கூறியுள்ளார்.