சினோபெக் நிறுவனத்தின் முன்மொழிவு: ஒப்புதல் தொடர்பாக விளக்கமளித்த கஞ்சன
இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கு சீன அரசாங்கத்திற்கு சொந்தமான சினோபெக் நிறுவனம் கொண்டு வந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கான முதலீடு 4.5 பில்லியன் டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது திங்கட்கிழமைக்கான அமைச்சரவை நிகழ்ச்சி நிரலில் உள்ளது. அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட குறித்த நிறுவனம் அழைக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சினோபெக்கின் முதலீட்டு முனைப்பு
சினோபெக்கின் இந்த முதலீட்டு முனைப்பு, சீனாவின் எல்லைகளுக்கு அப்பால் தமது வர்த்தம் விரிவடைவதற்கான நீண்ட முயற்சியில் ஒரு திருப்புமுனையாக அமையும்.
ஏற்கனவே சினோபெக், சவூதி அரேபியாவில் சுத்திகரிப்பு சொத்துக்களையும் ரஷ்யாவில் பெட்ரோ கெமிக்கல்ஸ் உற்பத்தியையும் கொண்டுள்ளது.
இது பீஜிங்கின் லட்சியமான பட்டுப்பாதை முன்முயற்சியுடன் பொருந்துகிறது. இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஒப்புதலைப் பெற்ற பிறகு, சுத்திகரிப்பு மற்றும் தொழில்நுட்ப அளவை இறுதி செய்வது உட்பட அடிப்படை பொறியியல் வடிவமைப்பை சினோபெக் ஆரம்பிக்கும் என்று சினோபெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
முன்னதாக 150 பெட்ரோல் நிலையங்களை நடத்துவதற்கான உரிமத்துடன், இலங்கையில் கால் பதித்துள்ள மூன்றாவது சர்வதேச நிறுவனமான, சினோபெக் அண்மையில் எரிபொருள் சில்லறை வர்த்தகத்தில் இணைந்துக்கொண்டது.
சீனாவின் இந்த சுத்திகரிப்பு நிலையம் இலங்கைக்கு அப்பால் உள்ள உள்ளூர் எரிபொருள் நுகர்வு குறைவாக உள்ள சந்தைகளை குறிவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |