நிலக்கரி கொள்வனவிற்கு அமைச்சரவையிடம் கோரப்பட்டுள்ள அனுமதி
லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இரண்டு நிறுவனங்களிடமிருந்து நிலக்கரியை அவசரமாக கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கோரப்பட்டுள்ளது.
நாட்டிற்கு விநியோகம் வருவதில் தாமதம் மற்றும் விநியோகஸ்தர்கள் முன்வராத அபாயத்தை சுட்டிக்காட்டி, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இரண்டு நிறுவனங்களிடமிருந்து ஒன்பது ஏற்றுமதிகளை பெறுவதற்கு அமைச்சரவையிடம் அனுமதி கோரியுள்ளார்.
அவசரக் கொள்வனவாக 180 நாள் கடன் வசதியின் கீழ் 300,000மெட்ரிக் தொன் நிலக்கரியை கொள்வனவு செய்ய அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளது.
குறைந்தது இரண்டு மாதங்கள் தேவை
எனினும் இந்த செயல்முறைக்கு குறைந்தது இரண்டு மாதங்கள் ஆகலாம் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் Black Sand Commodities FZ-LLC நிறுவனத்திடமிருந்து நான்கு ஏற்றுமதிக்கான நிலக்கரியையும் , சிங்கப்பூர் ஓவர்சீஸ் எண்டர்பிரைசஸிடம் இலிருந்து ஐந்து ஏற்றுமதிகளையும் கொள்வனவு செய்ய அவர் முன்மொழிந்துள்ளார்.
2022, ஆகஸ்ட் 25 அன்று வழங்கப்பட்ட நிலக்கரி கேள்விப்பத்திரம் கடந்த வியாழன் அன்று அமைச்சரவையால் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுள்ளன.
இதற்கிடையில், கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்டு, எதிர்வரும் டிசம்பரில் இறக்கப்பட உள்ள 1.142 மில்லியன் மெட்ரிக் தொன் நிலக்கரியை விரைவாக வழங்க விநியோகஸ்தர்கள் புதிய இறுக்கமான கட்டண விதிமுறைகளை கோரியுள்ளனர்.
அதன்படி, சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று, நிலக்கரி இருப்புகளை இறக்குவதற்கு முன் மொத்த கட்டணத்தில் 30% தை செலுத்தவேண்டும் என கோரியுள்ளது இந்த நிலக்கரிகள் அக்டோபர் 20 முதல் 25 வரை இலங்கையை வந்தடையும்.
தற்போது நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் வசம் உள்ள நிலக்கரி இருப்பு அக்டோபர் 28 வரை மட்டுமே போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நிலக்கரி கப்பல் 30 நாட்களுக்குள் நாட்டை வந்தடைய முடியும்
என்பதாலும், திட்டமிட்டபடி புதிய இருப்புக்களை பெற முடியுமென்றால் கடுமையான
மின்வெட்டுகளை விதிக்க வேண்டிய அவசியமில்லை என லக்விஜய மின் உற்பத்தி நிலைய
அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.