பால் மா விலை அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்: நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை
பால் மா, யோகட் மற்றும் பால் பானங்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை என நுகர்வோர் விவகார அதிகாரசபை மறுத்துள்ளது.
சமூக ஊடகங்களில் "முக்கிய செய்தி" என்ற வடிவில் பரப்பப்படும் ஒரு பதிவில் விலை அதிகரிப்பு குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒரு கிலோகிராம் பால் மா விலை ரூ. 260 ஆலும், ஒரு போத்தல் பால் பானத்தின் விலை ரூ. 40 ஆலும், ஒரு யோகட்டின் விலை ரூ. 20 ஆலும் உயர்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்புத் தகவல்கள் முற்றிலும் தவறானவை எனக் குறிப்பிட்டுள்ள அதிகாரசபை, அதிகாரப்பூர்வ அல்லது நம்பகமான ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்படாமல் இத்தகைய செய்திகளைச் சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என நுகர்வோரைக் கேட்டுக்கொண்டுள்ளது.
"ஒரு பதிவில் முக்கிய செய்தி என்று குறிப்பிடுவதாலேயே அது உண்மையாகிவிடாது" எனச் சுட்டிக்காட்டியுள்ள அதிகாரசபை, சரிபார்க்கப்படாத தவறான தகவல்கள் நுகர்வோர் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் சந்தையில் குழப்பத்தையும் ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது.
விலை மாற்றங்கள் குறித்த செய்திகளைச் சமூக ஊடகங்களில் பகிர்வதற்கு முன்னர், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலம் அவற்றை உறுதிப்படுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், சந்தேகத்திற்கிடமான விலை அதிகரிப்புகள் அல்லது சந்தை முறைகேடுகள் தொடர்பில் வேலை நேரங்களில் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு முறைப்பாடு அளிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.