திருகோணமலையில் பேருந்து பிரச்சினையால் அவதியுறும் பயணிகள்
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இரு பிரதான நகரங்களுக்குமிடையே போக்குவரத்து சேவையில் ஈடுபடும் 76ஆம் இலக்க பேருந்துகள், கிண்ணியாவின் உட்புறக் கிராமங்கள் ஊடாகச் செல்வதற்கு போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியூடாக தற்போது பயணிக்கின்ற இந்தப் பேருந்துகள், கிண்ணியாவின் முக்கிய சந்திப்புகளைத் தவிர்த்துச் செல்வதால், உட்புறக் கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்து ரீதியாகப் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
பேருந்து பிரச்சினையால் அவதியுறும் மக்கள்
குறிப்பாக, இந்த பேருந்துகளை புகாரிச்சந்தி, குட்டிகராச், ஆலங்கேணி மற்றும் பைசல் நகர் ஆகிய மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் ஊடாகத் திருப்பி விடுவதன் மூலம், அப்பகுதி மக்கள் நீண்டதூரப் பயணங்களை இலகுவாக மேற்கொள்ள முடியும் எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.
"தற்போது நாம் தூர இடங்களுக்குச் செல்வதற்கு பல பேருந்துகளை மாறிச் செல்ல வேண்டியுள்ளது.

இதனால் நேர விரயமும் மேலதிக செலவுகளும் ஏற்படுகின்றன. 76 ஆம் இலக்க பேருந்துகள் எமது கிராமங்களின் ஊடாகச் செல்லுமாயின் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழகம் செல்வோர், கல்விக் கல்லூரிகளுக்கு செல்வோர், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் நோயாளிகள் எனப் பல தரப்பினரும் நன்மையடைவார்கள்" என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, பொதுமக்களின் இந்த நியாயமான கோரிக்கையினைக் கருத்திற் கொண்டு, கிழக்கு மாகாண வீதிப் போக்குவரத்து அதிகாரசபை மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) என்பன இணைந்து உரிய தீர்வை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.