நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத வரவு செலவுத் திட்டம்: சுரேஷ் காட்டம்
ஜனாதிபதியினால் கடந்த 14ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் மக்களின் மீது மேலும் சுமைகளை ஏற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் ஏற்கனவே பொருளாதார ரீதியில் பாதிப்படைந்த மக்களின் வாழ்க்கைச் செலவை மேலும் அதிகரிப்பதையே இலக்காகக் கொண்டுள்ளது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கையொன்றில் இந்த விடயம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டமானது எந்தவிதமான ஆரவாரமுமின்றி, நாடாளுமன்றத்தின் ஆதரவுக் குரல்களுமின்றி ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவால் நாடாளுமன்றத்தில் கடந்த 14ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம்
மொத்த வருமானமாக 3415பில்லியன் ரூபா என்றும் மொத்த செலவாக 5819 பில்லியன் ரூபா என்றும் எதிபார்க்கப்படுகிறது. அதன்படி துண்டுவிழும் தொகையாக 2404 பில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளுக்கு இணங்கவே இந்த வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அதில் உண்மையும் உள்ளது. இலங்கை ஏற்கனவே வங்குரோத்து அடைந்த நாடாகவும் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத ஒரு நாடாகவும் தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டுள்ளது.
இதன் காரணமாக மிகப்பாரிய அளவிலான பணவீக்கமும் அதன் விளைவாக கடந்த வருடத்திலும்விட, நான்கு, ஐந்துமடங்கு விலை அதிகரிப்புகளும் ஏற்பட்டுள்ளது.
அரச உத்தியோகத்தர்களுக்கோ தனியார்துறை ஊழியர்களுக்கோ எவ்வித ஊதிய உயர்வுகளுமில்லாமல் இருக்கின்ற அதேசமயம், பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்து மிக உச்சத்தில் இருக்கின்றது. இதனால் ஏற்கனவே மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்த அரச உத்தியோகத்தர்களும் தனியார்துறை ஊழியர்களும் தொழிலாளர்களும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டுகோடி இருபது இலட்சம் மக்களைக் கொண்ட இந்த நாட்டில் ஏறத்தாழ தொண்ணூறு இலட்சம் மக்கள் மூன்றுவேளை உணவிற்கே அல்லாடுவதாக ஐ.நா. அறிக்கைகள் கூறுகின்றன. பாடசாலை மாணவர்களுக்கு போதிய ஊட்டச்சத்து இல்லை என்றும் பல இலட்சம் மாணவர்களுக்கு மூன்று வேளை உணவு கிடைப்பதில்லை என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.
வரவு செலவுத் திட்டம்
இவற்றிற்கு நிவாரணம் வழங்கக்கூடிய எந்த விடயங்களும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. அதுமாத்திரமல்லாமல், மக்களுக்கு எதிர்காலத்தின்மீது நம்பிக்கை தரக்கூடிய எத்தகைய எந்த விடயங்களும் இதில் உள்ளடக்கப்படவுமில்லை.
மேலும், நாட்டை கடன் சுமைகளிலிருந்து விடுவிக்க எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளும் என்றோ, மக்களுக்குமேல் ஏற்றப்பட்ட சுமைகளை எவ்வளவு கால அவகாசத்தில் தம்மால் குறைக்க முடியுமென்றோ எத்தகைய அறிவுறுத்தல்களும் இல்லை.
உண்மையில் ஜனாதிபதிக்கே இது தொடர்பில் எத்தகைய தெளிவும் இல்லை என்பதை உணரமுடிகிறது. ஜனாதிபதி தனது உரையின்பொழுது நாங்கள் எங்கே தவறிழைத்தோம் என்பதை மீண்டும் மீண்டும் கேட்டிருக்கின்றார். இலங்கை சுதந்திரமடைந்த அடுத்த வருடம் தான் பிறந்ததாகவும், இன்று எழுபத்தைந்து வருடம் பூர்த்தியடைந்த நிலையில் மிகப் பின்தங்கிய வங்குரோத்து அடைந்த ஒரு நாடாக இலங்கை இருப்பதை ஏற்றுக்கொண்டிருக்கின்ற ஜனாதிபதி அவர்கள் எங்கே பிழை விட்டிருக்கின்றோம் என்றும் கேட்கின்றார்.
உண்மையில் அவருக்கு இதற்கான விடை தெரிந்திருக்கும். ஆனால் அந்த விடயத்தைத் தயக்கமின்றி தெளிவாகச் சொல்வதற்கு அவர் அஞ்சுகின்ற நிலைமையை எங்களால் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த நாட்டில் பல மொழிகள், பல மதங்கள், பல கலாசாரங்கள் இருப்பதை ஏற்றுக்கொண்டு சகலருக்கும் சம உரிமைகள், சம சந்தர்ப்பங்கள் வழங்கும் ஒரு நாடாக இதனை மாற்றியிருந்தால், ஆசியாவின் வளமிக்க ஒரு நாடாக இது மாறியிருக்கும்.
எங்களுக்குப் பின்னர் சுதந்திரமடைந்த சிங்கப்பூர் அவ்வாறுதான் செயற்பட்டது. நான்கு மொழிகள், நான்கு இனங்கள், பல மதங்கள் பல்வகையான கலாசாரங்கள் இவை எதுவும் பாதிக்கப்படாத ஒரு நாடாக சிங்கப்பூர் கட்டியெழுப்பப்பட்டது. இன்று மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஈடாக வளர்ச்சியடைந்த ஒரு நாடாக சிங்கப்பூர் மாறியிருக்கின்றது.
இனவாதம்
இனவாதத்தில் ஊறிப்போயிருக்கக்கூடிய சிங்கள அரசியல் தரப்பு இதனை இன்னமும் உணர்ந்துகொண்டுள்ளதாகத் தெரியவில்லை. பௌத்தத்திற்கு முதலிடம் என்றும் சிங்கள பௌத்தத்தைப் பேணிப்பாதுகாப்பது என்றும் இதற்கு முப்படையினரும் உதவவேண்டும் என்ற அடிப்படையிலும் இனவாத சிந்தனைகளை மையமாக வைத்து கட்டியமைக்கப்பட்ட முப்படைகளின் பாதுகாப்பு செலவீனமாக இலங்கையின் மொத்த செலவீனத்தில் 11.2 வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 130கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் அதுவும் அண்டை நாடுகளுடன் நீண்ட எல்லைகளையும் எல்லைத் தகராறுகளையும் கொண்ட நாடே பாதுகாப்பிற்கு 9% தொகையையே ஒதுக்கியுள்ளது.
இரண்டுகோடியே இரண்டரை இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இலங்கைக்கு பாதுகாப்பிற்காக 41000 கோடி ரூபா செலவு அவசியம்தானா? இவ்வளவு பெருந்தொகை படையினர் தேவைதானா? பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வளவு முகாம்கள் தேவைதானா? இலங்கை, எந்த நாட்டிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கு இவ்வளவு பெரிய பாதுகாப்புப்டையை வைத்துக்கொண்டு அதற்காக இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்கின்றது? இலங்கை, உலகத்தின் பதிநான்காவது பெரிய இராணுவத்தைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகின்றது" என தெரிவித்துள்ளார்.

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam
