இலங்கைக்கு வருமாறு திபெத் ஆன்மீக தலைவர் தலாய் லாமாவுக்கு பௌத்த பிக்குகள் கோரிக்கை
பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கையின் பௌத்த பிக்குகள், திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய் லாமாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவின் புத்தகாயாவுக்கு பயணம் செய்திருந்த இலங்கையின் முக்கிய பிக்குகள் குழுவினரே இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
கடந்த வாரத்தில் அவர்கள், தலாய் லாமாவை சந்தித்தனர்.ராமாண்ய மகா சங்கத்தின் பிரதம மதகுரு மாஹூல்வேவே விமல தேரர் உட்பட்டவர்கள் இந்தப் பயணத்தில் இணைந்திருந்தனர்.
தலாய் லாமா, இந்தியாவின் புத்தகாயாவுக்கு வந்தமை காரணமாக அங்கு பெரும்பாலானவர்கள் பயணம் செய்கின்றனர்இந்தநிலையில் அவர் இலங்கைக்கு வரவேண்டும். அவர் இலங்கைக்கு பயணம் செய்தால், அவரை பின்பற்றி பலர் இலங்கைக்கு பயணம் செய்வர்.
இலங்கையின் சுற்றுலாத்துறை முன்னேற்றம்
இதனால் இலங்கையின் சுற்றுலாத்துறை முன்னேற்றம் அடைந்து நாடு பொருளாதாரத்தில் சிறக்கும் என்று விமல தேரர் உட்பட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் இலங்கையின் பௌத்த பிக்குகளின் கோரிக்கையை தலாய் லாமா ஏற்றுக்கொண்டாரா என்ற தகவலை இந்த செய்தியை பிரசுரித்த இந்திய செய்தித்தளம் குறிப்பிடவில்லை.
ஏற்கனவே 2015ஆம் ஆண்டு தலாய் லாமாவின் இலங்கை பயணம் ஏற்பாடு செய்யப்பட்டபோதும், சீனாவின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது.
ஒரே சீனக் கொள்கைக்கு இணங்கி, இந்த முடிவை எடுத்ததாக இலங்கை அரசாங்கம் அப்போது அறிவித்திருந்தது.
தற்போதும் சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்புக்கு சீனாவின் உதவி அவசியமான
நிலையில், இலங்கை அரசாங்கம், இதற்கு இணங்குமா? என்பது கேள்விக்குரிய விடயமாகவே
கருதப்படுகின்றது.