பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பேச்சுரிமையைப் பாதிக்கலாம்: பிரித்தானிய கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை
பிரித்தானியாவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் அதன் உண்மை நோக்கத்தைத் தாண்டி, சமூக ஆர்வலர் குழுக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவது குறித்து அந்நாட்டின் பயங்கரவாத விவகாரங்களுக்கான சுயாதீன கண்காணிப்பு அமைப்பு தனது வருடாந்த அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது.
இந்தச் சட்டங்களின் வரம்பு மீறிய பயன்பாடு, சாதாரண மக்கள் போராட்டங்களுக்கும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் பயங்கரவாதச் செயல்களுக்கும் இடையிலான வேறுபாட்டை மங்கச் செய்வதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமைப்புகள் தடை செய்யப்பட்ட விவகாரம்
குறிப்பாக, 'பாலஸ்தீன ஆக்ஷன்' (Palestine Action) போன்ற அமைப்புகள் தடை செய்யப்பட்ட விவகாரம், வெறும் சொத்துச் சேதத்தை மட்டுமே பயங்கரவாதமாக வகைப்படுத்துவதில் உள்ள சட்டச் சிக்கல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
இலங்கையில் முடிவிற்கு வரும் வங்கியொன்றின் நடவடிக்கைகள் - இன்றுடன் நிரந்தரமாக மூடப்படும் வங்கிக் கிளைகள்
தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின் பரந்த வரையறை காரணமாக, வன்முறையில் ஈடுபடாத அல்லது உயிருக்கு ஆபத்து விளைவிக்காத போராட்டக்காரர்கள் கூட பயங்கரவாதப் புலனாய்வு வளையத்திற்குள் கொண்டு வரப்படும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர் ஜொனாதன் ஹால் எச்சரித்துள்ளார்.
சொத்துக்களுக்கு ஏற்படும் 'கடுமையான சேதம்' என்பதற்குத் தெளிவான சட்ட விளக்கம் இல்லாதது, நீதிமன்றங்கள் இதனைத் தன்னிச்சையாக விளக்குவதற்கு வழிவகுக்கிறது.
எனவே, பயங்கரவாதச் சட்டங்களைப் பயன்படுத்துவதற்கு முன்னதாக, உயிருக்கு ஆபத்து அல்லது தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்ற கடுமையான நிபந்தனைகளைச் சேர்க்க வேண்டும் என அவர் பரிந்துரைத்துள்ளார்.

பயங்கரவாதச் சட்டங்கள்
மேலும், இணையவழிப் பேச்சுக்கள் மற்றும் அரசியல் கருத்து வெளிப்பாடுகளுக்காக அமைப்புகளைத் தடை செய்வதற்குப் பயங்கரவாதச் சட்டங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவது குறித்தும் இந்த அறிக்கை கவலை வெளியிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் மற்றும் கைதுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பேச்சுரிமைக்கும் பாதுகாப்பிற்கும் இடையிலான சமநிலையைப் பேணுவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையும் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பிரித்தானிய உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் இந்தப் பரிந்துரைகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.