பிரித்தானிய தமிழர்கள் தொடர்பில் பொய் சொன்ன பிரித்தானிய அரசாங்கம் - வி.உருத்திரகுமாரன்!
2009ம் ஆண்டுக்குப் பின்னர் பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தமிழர்களிடத்தில் ஆதரவில்லை எனப் பிரித்தானிய அரச தரப்பு முன்வைத்திருந்த கருத்து உண்மைக்குப் புறம்பானது என நாடுகடத்தத் தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விடுதலைப்புலிகள் மீதான தடையினை நீக்குவதற்கான தமது விருப்பினை பிரித்தானிய வாழ் தமிழர்கள் வெளிப்படுத்துவதற்கான அவசர அழைப்பொன்றினை விடுத்துள்ளார்.
விடுதலைப்புலிகள் மீதான தடையினை நீக்குவது தொடர்பில் பிரித்தானிய வாழ் சிங்கள மக்களிடத்திலும் எதிர்ப்பு காணப்படுகின்றது எனத் தடை செய்யப்பட்ட அமைப்புக்களுக்கான மேன்முறையீட்டுச் சிறப்பு நீதிமன்றில் தெரிவித்திருந்த பிரித்தானிய உள்துறை அமைச்சு, தடையினை நீக்கினால் எதிர்விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் எனவும் தனது வாதுரையில் முன்வைத்திருந்தது.
இதனைச் சுட்டிக்காட்டியுள்ள நாடுகடத்தத் தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன்,
விடுதலைப்புலிகள் மீதான பற்றும், மதிப்பும் தமிழர்களிடத்தில் ஒருபொழுதும் குறையவில்லை. தடை செய்யப்பட்ட அமைப்புக்களுக்கான மேன்முறையீட்டுச் சிறப்பு நீதிமன்றில் பிரித்தானிய உள்துறை அமைச்சு முன்வைத்த வாதம் பொய்யானது என்பதனை வெளிப்படுத்த, தடையினை நீக்குவதற்கான தமது அரசியல் விருப்பினை பிரித்தானிய வாழ் தமிழ் உறவுகள் lifttheban.uk இந்த இணையதளத்தின் மூலம் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் பிரித்தானியத் தமிழர்களை நோக்கிய அழைப்பு விடுக்கையில்,
பயங்கரவாத தடைப்பட்டியலில் விடுதலைப் புலிகளைத் தொடர்ந்தும் வைத்திருக்கும் பிரித்தானிய உள்துறையமைச்சரின் செயல் சட்ட முறைமைக்கு முரணானது எனத் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையம் தனது முதல் தீர்ப்பில் (ஒக்டோபர் 21-2020) தெரிவித்துள்ளது.
தனது இரண்டாம் கட்டத்தீர்ப்பில், தடையினை நீக்குவது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப் பிரித்தானிய அரசாங்கத்துக்கு 90 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளது.
தடையினை நீக்குவதற்கான சட்டப்போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து அதில் முதல்கள வெற்றியினையும் கண்டுள்ள நிலையில், அதனை அரசியல்ரீதியான வெற்றியாக்குவது தற்போது பிரித்தானிய வாழ் மக்களுடைய கைகளிலேயே உள்ளது. விடுதலைப்புலிகள் மீதான தடை என்பது நாடாளுமன்றத்தின் ஊடாகவே கொண்டு வரப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமது தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தடையினை நீக்கக் கோரும் தமது விருப்பினை பிரித்தானிய வாழ் தமிழர்கள் வெளிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களது அழுத்தம் உள்துறை அமைச்சரை நோக்கிச் செல்லும்.
இதற்காகவே lifttheban.uk எனும் இணையத்தளம் உருவாக்கப்பட்டுச் செயற்பட்டு வருகின்றது. இந்த இணையத்தளத்துக்குச் சென்று தடை நீக்கத்திற்கான தமது விருப்பினை வெளிப்படுத்த வேண்டிய தமிழர்கள் ஒவ்வொருவரினதும் வரலாற்றுக் கடமையாகவுள்ளது எனப் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது அழைப்பில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை செவ்வாய்க்கிழமை பிரித்தானியப் பிரதமர் வாயில் தளத்தினை விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான மக்கள் விழிப்பூட்டல் நடைப்பயணம் *" WALK FOR LIFT THE BAN"* வந்தடையவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வேல்ஸ் நாடாளுமன்றத் தொகுதியில் தொடங்கியிருந்த இந்த நடைப்பயணம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது, பிரித்தானிய வாழ் தமிழர்களின் இயல்பு வாழ்க்கையினை பாதிப்பதோடு, தமது சுதந்திரமான அரசியல் செயற்பாடுகளுக்கும் தடையாக இருக்கின்றது என வலியுறுத்தியிருந்தது.