மன்னாரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக விசேட செயலமர்வு
மன்னார் மாவட்டத்தில் அரச திணைக்களம் மற்றும் தனியார் அமைப்புகளில் கடமையாற்றும் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கி மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான செயலமர்வொன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது.
இந்த செயலமர்வானது மன்னார் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்று (05.04.2024) காலை முதல் மாலை வரை நடைப்பெற்றுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இடம்பெற்ற குறித்த செயலமர்வில் சுற்றுச்சூழல் தொடர்பாகவும் குறிப்பாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மன்னாரில் கழிவகற்றல் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில் மன்னார் நகரில் ஏற்பட்டுள்ள சுகாதார பாதிப்புகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன் மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகளை எதிர் காலத்தில் எவ்வாறு மாற்றியமைக்க முடியும் என்பது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
மேலும் மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தியின் சாதக பாதக நிலை,கணிய மணல் அகழ்வினால் ஏற்பட்டுள்ள சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை இச்செயலமர்வில் கொழும்பில் உள்ள எஸ்.ஐ.பி.எல் நிறுவனத்தின் முகாமையாளர் மற்றும் குறித்த நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பிரதி நிதி ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமளித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |