மற்றுமொரு சர்ச்சைக்குரிய சம்பவம்! சாரதி மற்றும் நடத்துனரின் செயலால் 25 பேர் நிர்க்கதி
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து தொடர்பில் மற்றுமொரு சர்ச்சைக்குரிய சம்பவம் பதிவாகியுள்ளது.
வெலிகந்தையில் இருந்து கல்கந்த வரை இயக்க திட்டமிடப்பட்ட, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி மற்றும் உதவியாளர் வெலிகந்த டிப்போவின் ஓய்வறையில் குடிபோதையில் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.
வாடகை வண்டி
இதனால் பேருந்தில் பயணிக்க வேண்டிய பயணிகள் வாடகை வண்டி மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பேருந்து வெலிகந்த நகரத்திலிருந்து கல்கந்த பகுதிக்கு பிற்பகல் 2:30 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
இருப்பினும் பேருந்தின் சாரதியும் நடத்துனரும் குடிபோதையில் தூங்கிக்கொண்டிருந்ததாகவும், இதன் விளைவாக, பயணிகள் அந்தப் பகுதிக்குச் செல்லவோ அல்லது வெலிகந்த நகரத்தை அடையவோ முடியாத நிலை ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
25 பேர் நிர்க்கதி
கல்கந்த பகுதிக்கு வேறு பேருந்துகள் இல்லாததால் பயணிகளுக்குக் கிடைத்த ஒரே பேருந்து இதுதான் எனவும் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர், மாணவர்கள் உட்பட 25 பேரை வெலிகந்த, கல்கந்த மற்றும் குடபொகுன பகுதிகளுக்கு வாடகை வண்டி மூலம் அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பேருந்து தற்போது வெலிகந்த பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் இரு நாட்களுக்கு முன்னர் பாடசாலை மாணவர்களை பேருந்தில் இருந்து பலவந்தமாக இறக்கிய இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.