புறக்கோட்டையில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான அழகு சாதனப் பொருட்கள் மீட்பு
கொழும்பு- புறக்கோட்டை பகுதியில் எவ்வித அடையாளக் குறிகளுமற்ற நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட பெருமளவிலான அழகு சாதனப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் நேற்று (09) சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதே குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சோதனை நடவடிக்கையின் போது கட்டாயமாக இருக்க வேண்டிய லேபிள்கள் அல்லது அடையாளக் குறிகள் எதுவுமின்றி சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டிருந்த உடல் பூச்சு கிறீம்கள் (Body Creams) மற்றும் லோஷன்கள் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.
சட்ட நடவடிக்கை
கைப்பற்றப்பட்ட அழகு சாதனப் பொருட்களின் மொத்த பெறுமதி சுமார் 10 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கைப்பற்றப்பட்ட அழகு சாதனப் பொருட்களில் 13 வெவ்வேறு வகையான வர்த்தக நாமங்களின் மாதிரிகள் மேலதிக ஆய்வுகளுக்காக ஆய்வுகூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஆய்வுகூட அறிக்கையின் பின்னர் இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அறிவித்துள்ளது.