மயிலத்தமடு மேய்ச்சல் தரை விவகாரம்! சுமந்திரன் முன்னிலையில் ரணில் எடுத்த நடவடிக்கை(Video)
மயிலத்தமடு மேய்ச்சற்தரை விவகாரம் தொடர்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நான் ஜனாதிபதியுடன் சந்தித்து இது தொடர்பாகக் கதைத்த போது எனக்கு முன்பாகவே தனது செயலாளரை அழைத்து உடனடியாக பொலிஸ் அனுப்பி அங்கிருப்பவர்களை அப்புறப்படுத்துமாறு உத்தரவு கொடுத்தார். ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மயிலத்தமடு மாதவணை மேய்ச்சற்தரை கோரிய பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் 31வது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதிக்கு அழுத்தம்
இதன்போது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்றைய தினம் போராட்ட களத்திற்கு வருகை தந்திருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினருடன், மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் மேயர் தி.சரவணபவன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் லோ.தீபாகரன் ஆகியோரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
பண்ணையாளர்களுடன் குறிப்பட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடிய பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் தங்கள் கால்நடைகளைக் கொண்டு சென்று மேய்ச்சற்தரையாகப் பயன்படுத்தும் பண்ணையாளர்கள் இன்று 31வது நாளாகவும் இங்கு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
அந்த பிரதேசத்திலே வேற்று மாவட்டத்தில் இருந்து ஆட்களைக் கொண்டுவந்து அவர்களுக்கு பயிர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வசதிகளை அரசாங்கம் முன்னர் செய்து போலவே தற்போதும் செய்து கொண்டிருக்கிறது.
அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்ததுவதற்கு நாங்கள் பல்வேறு முயற்சிகளைச் செய்து வந்திருக்கின்றோம். ஆனால் எதுவும் கைகூடவில்லை.
2020ம் ஆண்டு எங்களால் இது சம்மந்தமாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 2021ம் ஆண்டு மகாவலி திணைக்களம் அவர்களை அப்புறப்படுத்துவோம் என்ற உறுதிமொழி கொடுத்து அந்த வழக்கு நிறுத்தப்பட்டது.
ஆனால் அந்த உறுதிமொழி தற்போது காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஆகையால் நாங்கள் மீண்டும் நீதிமன்றம் சென்று அவர்கள் கொடுத்த உறுதிமொழியை நடைமுறைப்படுத்துவதற்கான மனுவைத் தாக்கல் செய்யவுள்ளோம்.
அதற்கிடையில் பல தடவைகள் நாங்கள் ஜனாதிபதியுடன் இது சம்மந்தமாகப் பேசினோம். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நான் ஜனாதிபதியுடன் சந்தித்து இது தொடர்பாகக் கதைத்த போது எனக்கு முன்பாகவே தனது செயலாளரை அழைத்து உடனடியாக பொலிஸ் அனுப்பி அங்கிருப்பவர்களை அப்புறப்படுத்துமாறு உத்தரவு கொடுத்தார். ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
ஜனாதிபதியின் அந்த சொல்லுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டதோ தெரியவில்லை. அல்லது எனக்கு அவ்வாறு சொல்லிவிட்டு நான் அங்கிருந்து சென்றதன் பின்னர் செயலாளரை அழைத்து ஒன்றும் செய்ய வேண்டாம் என்று சொன்னாரோ தெரியவில்லை.
இன்று திரும்பவும் ஒரு கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில் எமது நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இக்கூட்டத்தில் இது தொடர்பாகப் பேசுவார்.
இயன்றளவு அழுத்தத்தைக் கொடுத்து அரசு இயந்திரத்தின் ஊடாக அங்கிருப்பவர்களை அப்புறப்படுத்தி இந்தக் கால்நடைகளை உடனடியாக அங்கு கொண்டு செல்வதற்கான முயற்சியை திரும்பவும் எடுத்துக் கொண்டிருக்கின்றோம். அது கைகூடுமோ தெரியாது ஆனால் அடுத்த வாரமளவில் நீதிமன்றத்தில் மகாவலி அதிகாரசபை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு மனுவைத் தாக்கல் செய்ய இருக்கின்றோம்.
தற்போது பண்ணையாளர்களின் கால்நடைகள் இருக்கும் விவசாயக் காணிகளில் இருந்து அந்தக் கால்நடைகளை அகற்றுமாறு அவர்களுக்கு வற்புறுத்தல் வந்துள்ளது. அந்த விவசாயக் காணிகள் உரித்தானவர்களுக்கு நாங்கள் ஒரு வேண்டுகோளினை விடுக்கின்றோம். இயன்றளவு நீங்கள் கால்நடை வளர்ப்பாளர்களுடன் ஒத்து இயங்குவதற்கு முயற்சி செய்யுங்கள்.
இது அவர்களாலே உருவாக்கப்பட்ட விடயம் அல்ல. அரசாங்கத்தினால் வேண்டுமென்றே செய்யப்படுகின்ற ஒரு நிகழ்ச்சி. வயல் விதைப்பு இருக்கின்றது என்பது தெரியும் ஆனால் இயன்றளவு ஒரு வாரத்துக்காவது இதனைப் பிற்போட்டு அவர்கள் சரியாக இந்தக் கால்நடைகளை அங்கு கொண்டு செல்லும் வரைக்கும் ஒத்துழைக்க வேண்டும் என விவசாய அமைப்புகளை நாங்கள் வினயமாககக் கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.





ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
