மட்டக்களப்பில் காட்டுப்பகுதியில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் முற்றுகை
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை காட்டுப்பகுதியில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
பொலிஸாரினால் இன்று மாலை முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையத்திலிருந்து பெருமளவான கசிப்பு உற்பத்தி மூலப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் பன்சேனை, நல்லதண்ணிக்குளம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியிலேயே இந்த முற்றுகை முன்னெடுக்கப்பட்டது.
சட்ட விரோத போதைப்பொருள் பாவனையினை தடுக்கும் வகையில் நாடெங்கும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கையின் கீழ் கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்த வகையில், படுவான்கரை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்திகள் முன்னெடுக்கப்படுவதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்நிலையில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி ஐ.பி.மக்கீம் தலைமையில், பெருங்குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப்இன்ஸ்பெக்டர் அமரசிறி, போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி சப்இன்ஸ்பெக்டர் திஸாநாயக்க மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களான ஹாரூன், விஜயசேகர, ரமேஸ், மகேஸ், சந்திரகுமார்,ரத்னமல் ஆகியோர் கொண்ட குழுவினர் இந்த விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த முற்றுகையின் போது கசிப்பு உற்பத்தி செய்வதற்கான பொருட்கள், கசிப்பு உற்பத்திக்கான மூலப்பொருளான 6200 லீற்றர் கோடா மீட்கப்பட்டு அழிக்கப்பட்டதுடன், 30 லீற்றர் ஸ்பீறீட்டும் மீட்கப்பட்டது.
இதன்போது குறித்த பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் காட்டுக்குள் தப்பிச்சென்றுள்ளதாகவும், அவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.


