ஜனாதிபதியால் எமக்கு தீர்வு கிடைக்கும் - மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழிலாளர்கள் நம்பிக்கை
நாட்டினை நல்லமுறையில் ஆட்சி செய்யும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் எங்களது பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுத்தர முடியும் என நம்புவதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழிலாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு கடல்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட கடல் தொழில் மற்றும் வாவி மீன்பிடியில் ஈடுபடும் கடற்தொழிலாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம் கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்துக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.
வாழ்வாதாரம் மற்றும் கடல் வளங்கள் பாதிப்பு
கிண்ணியா கருக்குப்பனை பகுதியில் இருந்து வருகை தந்துள்ள சட்டவிரோத சுருக்குவலை தொழிலாளிகளால் தங்களது வாழ்வாதாரம் மற்றும் கடல் வளங்கள் பாதிக்கப்படுவதாகவும், அவற்றை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கடற்தொழிலாளர்களால் இன்று (16.10.2026) குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பாலமுனையிலும் பூனொச்சிமுனையிலும் உள்ள சட்டவிரோத சுருக்கு வலை தொழிலாளிகளை வெளியேற்று, அடிக்காதே அடிக்காதே ஏழை கடற்தொழிலாளரின் வயிற்றில் அடிக்காதே, கிண்ணியா - கருக்குப்பனை ஊரில் உள்ள கடல் வளங்களை அழித்தது போன்று மட்டக்களப்பு கடல் வளங்களை அழிக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் கடற்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்ட நடவடிக்கைகள்
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை தொடர்பாக பல்வேறு வகையிலும் முறைப்பாடுகளை முன்வைத்தும் இதுவரைக்கும் எந்த ஒரு திணைக்களத்தினாலும் இதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்காத நிலையிலே இன்றைய தினம் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது மனு ஒன்று மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழிலாளர்களால் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள உதவி பணிப்பாளருக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், ஈபிடிபியின் இணைப்பாளர் அந்தனி ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
