திட்டமிடப்பட்ட திகதியில் மாற்றம்! அமெரிக்காவில் இருந்து அவசரமாக நாடு திரும்பும் பசில்?
அமெரிக்கா சென்றிருந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று (29) இரவு மீண்டும் அமெரிக்காவை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லொஸ் ஏஞ்சல்ஸில் இருந்து புறப்படும் அவர் நாளை துபாய் வழியாக இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வந்தடையும் அவர், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையில் தலையீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, பசில் ராஜபக்ச இலங்கை வந்தவுடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக விசேட கலந்துரையாடலொன்றை கூட்டியுள்ளதாக தெரியவருகிறது. எனினும் பி.பீ ஜயசுந்தர தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பி.பீ ஜயசுந்தர தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும், ஜனாதிபதியின் செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதிலும், அரசாங்கம் இது தொடர்பான உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
எவ்வாறாயினும், அமெரிக்கா சென்றிருந்த பசில் ராஜபக்ச ஜனவரியிலேயே நாடு திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில், அவர் அவசரமாக நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.