அமெரிக்காவிலிருந்து கொழும்பு நோக்கிய பயணம் : விபத்து சம்பவிப்பதற்கு முன்னர் கப்பலில் ஏற்பட்ட மாற்றங்கள்
அமெரிக்காவின் பால்டிமோர் நகருக்கு அருகிலுள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது கொழும்பு நோக்கி புறப்பட்ட கொள்கலன் கப்பல் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து அமெரிக்க நேரத்தின்படி நேற்று அதிகாலை 01:25 மணியளவில் சம்பவித்தது.
அமெரிக்காவின் பால்டிமோர் துறைமுகத்திலிருந்து அதிகாலை 00:24 மணிக்கு கொழும்பு நோக்கி டாலி என்ற கப்பல் புறப்பட்டது. கப்பல் புறப்பட்டு சுமார் ஒருமணித்தியாலத்தின் பின் Francis Scott Key bridge பாலத்தை நெருங்கியது.
பின்னர் கப்பல் திடீரென அதன் நேரான பாதையில் இருந்து திசைமாறி மெதுவாக சென்றுள்ளது.
இந்த நேரத்தில், கப்பலின் வெளிப்புறத்தில் உள்ள அனைத்து விளக்குகளும் திடீரென அணைக்கப்பட்டு, சிறிது நேரத்தின்பின் ஒளிர்ந்தன. பாலத்தை மோதும் முன்னர் இரு சந்தர்ப்பங்களில் இவ்வாறு நிகழ்ந்துள்ளன.
மேலும் கப்பலிலிருந்து புகையும் வெளியேறத் தொடங்கியமை காணொளியில் பதிவாகியுள்ளது.
இயந்திரக் கோளாறு
இதனையடுத்து சில விநாடிகளின் பின் கப்பல் பாலத்தில் மோதியதில் பாலம் முற்றாக சரிந்து விழுந்தது. இருப்பினும் கப்பலில் உள்ளவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் 15 கிமீ/மணி வேகத்துடன் கப்பல் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயந்திரக் கோளாறு அல்லது மின்பிறப்பாகியிலுள்ள கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கப்பல் நிபுணர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
Clear Video of Traffic movement on Bridge before hit by a ship
— Chaudhary Parvez (@ChaudharyParvez) March 26, 2024
At least 20 vehicles were on the bridge.
#keybridge #baltimore #Ship #FrancisScottKeyBridge #bridgecollapse #USA #BREAKINGNEWS #Baltimore #Maryland #BREAKING pic.twitter.com/NkH36hQ8Qp
சுமார் 01:50 மணிக்கு சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் பாலம் முற்றிலும் இடிந்து விழுந்ததைத் தெரிவித்தனர்.
கப்பல்மோதிய சந்தர்ப்பத்தில் பாதைகளை திருத்தம் செய்யும் எட்டு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் இருந்திருக்கலாம் எனவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாழ்வெப்பநிலை
மேலும் பாலத்தில் இருந்த பல வாகனங்கள் நீரில் மூழ்கியதுடன் ஆறு பேரை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.
நேற்றைய நிலவரப்படி படாப்ஸ்கோ நதி மிகவும் குளிராக இருந்ததாகவும், அதன் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, ஆற்றில் விழுந்து காணாமல் போனவர்களின் உடல்நிலை மோசமடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தை தொடர்ந்து மேரிலாந்து கவர்னர் வெஸ் மூர் அவசரகால நிலையை அறிவித்துள்ளதுடன் தற்போது பால்டிமோர் துறைமுகம் கப்பல்களுக்கு மூடப்பட்டுள்ளது.
பாலத்தை புனரமைப்பதற்கும் துறைமுகத்தை மீண்டும் திறப்பதற்குமான "முழு செலவையும்" மத்திய அரசு ஏற்கும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.