யானை தந்தத்துடன் கைதானவர்களுக்கு பிணை: தப்பி ஓடியவருக்கு பிடியாணை!
முல்லைத்தீவில் யானைத்தந்தத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக ஒரு சோடி யானைத்தந்தங்களுடன் இருவர் கடந்த 16ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் தப்பி ஓடிய நிலையில் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் நெடுங்கேணி - கீரிசுட்டான் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் வவுனியா, கற்குளம் பகுதியினை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை நேற்றுமுன்தினம் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது தப்பி ஓடிய சந்தேக நபரை கைதுசெய்யுமாறு வவுனியா நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.



